

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பாமக சார்பில் சென்னையில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் பாமக சார்பில் நேற்று மாலை போராட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த போராட் டத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் மு.ஜெயராமன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் மண் பானைகளுடன் கலந்துகொண்ட பெண்கள், போராட்டத்தின் முடிவில் பானை களை போட்டு உடைத்தனர். இதேபோல் பாமக சார்பில் தமிழகம் முழுவதும் போராட் டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுதான் காரணம். சென்னையில் வாரத்துக்கு ஒருமுறைகூட தண்ணீர் வரவில்லை. குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், நீர்நிலைகளை பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அரசியல் பிரச்சினையே தமிழக அரசுக்கு சரியாக உள்ளது.
அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், பாசன கால்வாய்கள் அனைத்தும் வறண்டுவிட்டது. குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீரை சுத்திகரித்து வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இனியாவது அனைத்தையும் தூர்வார வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிக்கவில்லை. வார்தா புயல் நிவாரணத்தையும் மத்திய அரசு வழங்கவில்லை. தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.