Published : 15 Mar 2014 12:00 AM
Last Updated : 15 Mar 2014 12:00 AM

அதிமுக - பாஜக கூட்டுச் சதி- ஸ்டாலின் குற்றச்சாட்டு

`அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே இருக்கும் கூட்டு சதி தேர்தலுக்கு பின் அம்பலமாகும்’ என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எப்.எம்.ராஜரத்தினத்தை ஆதரித்து வெள்ளிக்கிழமை களியக்கா விளையில் ஸ்டாலின் பேசிய தாவது:

தேர்தல் நேரத்தில் மட்டுமே சிலர் மக்களை சந்திப்பர். தேர்தல் வந்தாலும், வராவிட்டாலும், ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் எப்போதும் மக்களைத் தேடி வரும் இயக்கம் திமுக. இப்போது திமுக ஆட்சியில் இல்லை. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தும் பெற வில்லை. ஆனால், மக்கள் மன்றத்தில் திமுகவே எதிர்கட்சி அந்தஸ்தில் இருக்கிறது. அந்த உணர்வோடுதான் அரசு செய்யும் தவறுகளை எதிர்த்தும் சுட்டிக் காட்டியும் வருகிறோம்.

இதே தொகுதிக்கு ஜெயலலிதாவும் சில நாள்களுக்கு முன் வந்தார். மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக எதுவும் செய்யவில்லை என பொய்யான பிரச்சாரத்தை செய்தார்.

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னோக்கி பாயும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். நாடாளுமன்றத்தில் திமுக தொடர்ந்து பேசியதால் இதிட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்தது. ஆனால், பாஜக தூண்டுதலால் பணிக்கு தடை போட்டனர். சேது சமுத்திரம் தேவையில்லை என ஜெயலலிதா நீதிமன்றத்தில் மனு செய்தார். அவரே, தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றும் சொல்லியிருந்தார். இது வெட்கக்கேடான விஷயம்.

ஜெ. மீது தாக்கு

கடந்த 23.10.2010-ல் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய ஜெயலலிதா, `கர்த்தர் அருளால் அதிமுக ஆட்சி அமைந்ததும் பட்டா நிலங்களில் ஆலயம் கட்ட அனுமதி தருவேன். உங்கள் பட்டா நிலத்தில் ஆலயம் கட்ட யாரை கேட்க வேண்டும்?’ என்றெல்லாம் பேசிச் சென்றார். ஆனால், அந்த அறிவிப்பை இன்றுவரை நிறைவேற்றவில்லை.

டிசம்பர் 2010-ல் திமுக ஆட்சியில் ரப்பர் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தினோம். ஆனால், அதிமுக அரசு பொறுப்பேற்றதும் புதிய ஒப்பந்தத்தைகூட போடவில்லை.

விலைவாசி உயர்வு

தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ பொன்னி அரிசி 40 ரூபாய். இப்போது 50 ரூபாய். சாதா அரிசி 20 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்ந்துள்ளது. மிளகாய் வத்தல் 60 ரூபாயில் இருந்து செஞ்சுரி (100) போட்டுள்ளது என்றார்.

கூடியிருந்தவர்கள் `இப்போது 110’ என்று கோஷமிட்டனர். உடனே மு.க.ஸ்டாலின், `அடடே வரும்போது 100 இருந்துச்சு. அதுக்குள்ள கூட்டிட்டாங்களா?’ என்றதும் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

தொடர்ந்து அவர் பேசுகையில், `தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவை விமர்சித்து ஜெயலலிதா பேசு வதில்லை. இருவருக்குள்ளும் கூட்டு சதி இருக்கிறது. இது தேர்தல் முடிவுகளுக்குபின் அம்பலமாகும்’ என்றார். இரவில் நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.

சனிக்கிழமை திருநெல்வேலி தொகுதியில் பிரச்சாரம் செய்யும் அவர், இரவு பாளையங் கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x