

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளால் ஏற்படும் தீக்காயங் களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள், டாக்டர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகை வரும் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடிக்கும் போது தீவிபத்துகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியன்று பட்டாசு வெடித்ததால் காயமடைந்த சிறுவர்கள் உட்பட 75 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மற்ற அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீக்காயம் அடைந்த நூற்றுக்கும் மேற் பட்டவர்கள் சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வார்டில் 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்ஸ்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் வருபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழுவினருடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை மற்றும் ஒட்டுறுப்பு சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் ஏ.ஜெகன்மோகன் கூறியதாவது:
பட்டாசு வெடி விபத்தில் முகம் மற்றும் கைகளில் காயம்பட்டுத்தான் அதிக அளவில் சிகிச்சைக்கு வருகின்றனர். அதனால் பட்டாசுகளை வெடிக்கும் போது, மிகவும் பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால், உடனடியாக அந்த இடத்தில் தண்ணீரை ஊற்ற வேண்டும். அப்போதுதான் வெப்பம் குறைந்து, காயத்தின் ஆழம் குறையும். அதன்பின் சுத்தமான துணியால் காயத்தை மூடியபடி, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். தீக்காயத்தின் மீது கண்டிப்பாக இங்க் ஊற்றக்கூடாது. இங்க் ஊற்றுவதால், காயம் எந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.