தலித் இளைஞர் படுகொலை: தமிழக பாஜக கடும் கண்டனம்

தலித் இளைஞர் படுகொலை: தமிழக பாஜக கடும் கண்டனம்
Updated on
1 min read

உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் பட்டப்பகலில் பொதுமக்கள் பார்க்கும்படி சாலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பாஜகவின் ஹெச்.ராஜா ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "உடுமலைப்பேட்டையில் நடந்த கொலை சம்பவத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்றார்.

இதேபோல் தமிழக பாஜக மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், "தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாகரிகமற்றச் செயல்" எனக் கண்டனம் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்(21). இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறி யியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர். இவர், பழநியைச் சேர்ந்த சின்னராஜின் மகளை காதலித்து 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகலில் இருவரும் உடுமலைக்கு வந்துள்ளனர். இவர்களின் வருகையை அறிந்த மர்ம கும்பல் பொது இடத்தில் சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது.

இதில் மாணவருக்கு கழுத்து, கைகளில் பலத்த வெட்டு விழுந்தது. அவரை காப்பாற்றச் சென்ற பெண்ணுக்கும் தலையில் வெட்டு விழுந்தது. கோவை அரசு மருத்துவமனைக்குக்கு எடுத்து செல்லும் வழியில் சங்கர் இறந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in