

சென்னை மற்றும் ஆந்திரா எல்லைப் பகுதிகளில் இருந்து நூற்றுக் கணக்கான பச்சைக் கிளிகள் விற்பனைக்காக பிடித்துவரப் படுகின்றன.
இவ்வாறு கொண்டு வரப்படும் கிளிகள் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விற்கப்படுகின்றன. கடந்த வியாழக்கிழமையன்று சூளைமேட்டில் 3 பெண்கள் பச்சைக் கிளிகளை விற்பனை செய்துகொண்டிருப்பதாக புளூ கிராஸ் அமைப்புக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து புளூ கிராஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது பச்சைக் கிளிகளை புடவைத் துணியால் கட்டி கூடையில் வைத்து அவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
புளூகிராஸ் அமைப்பின் சென்னை பொது மேலாளர் ஜான் வில்லியம் இதுகுறித்து கூறும்போது, “சிறகுகள் வெட்டப்பட்ட நிலையில் கூடை களில் இருந்த 157 பச்சை கிளிகள் மீட்கப்பட்டன. அவற்றில் 37 கிளிகள் ஏற்கெனவே இறந்திருந்தன. மற்ற கிளிகள் தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக் கப்பட்டுள்ளன. அவற்றின் சிறகுகள் வளர்ந்தவுடன் அவை வெளியே விடப்படும்” என்றார்.
இந்திய வனத்துறை சட்டம் 1972 படி கிளிகளை வீடுகளில் வளர்க்கக் கூடாது. அதனை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.