

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் 100-ம் ஆண்டு நிறைவு விழாவில் 12 டாக்டர்களுக்கு விருது வழங்கப்பட்டது.தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் 100-ம் ஆண்டு நிறைவு விழா சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கவுன்சில் அலுவலகத்தில் நடந்தது. கவுன்சில் தலைவர் பி.பாலகிருஷ்ணன் விழாவுக்கு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குமுதா லிங்கராஜ், செயற்குழு உறுப்பினர்கள் கே.செந்தில், கே.பிரகாசம், எம்.எஸ்.அஸ்ரப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் விழா மலரை வெளியிட, முதல் பிரதியை டாக்டர் மேஜர் ராஜா பெற்றுக்கொண்டார். அதன்பின் கவுன்சிலின் புதிய இணையதளத்தை தொடங்கி வைத்த ஜெ.ராதாகிருஷ்ணன், போலி டாக்டர்களை கண்டுபிடிக்க உதவும் ஸ்மார்ட் நேம் போர்டை கவுன்சில் உறுப்பினர்களுக்கு வழங்கினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகமுத்து தபால் தலையை வெளியிட, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி பெற்றுக்கொ ண்டார். இதனைத் தொடர்ந்து 100-ம் ஆண்டு நிறைவு விழா கண்காட்சியையும் நீதிபதி எஸ்.நாகமுத்து தொடங்கி வைத்தார்.
சிறப்பாக மருத்துவ சேவை புரிந்து வரும் டாக்டர்கள் பிரதாப் சி.ரெட்டி, மேஜர் ராஜா, சுப்பராயன், தேவதாஸ், சண்முகம், முத்து ஜெயராமன், கமலேஸ்வரி, தங்கவேலு, சாமிநாதன், சீனிவாசன், வேதாந்தம், ஆண்டப்பன் ஆகியோருக்கு விழாவின்போது விருது வழங்கப்பட்டது.
மாடர்ன் ஆடிட்டோரியம்
தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் பி.பாலகிருஷ்ணன் பேசும் போது, “கவுன்சிலில் பதிவு செய்துள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 1 லட்சத்து 15 ஆயிரம் டாக்டர்களுக்கு ஸ்மார்ட் நேம் போர்ட் வழங்கப்படும். டாக்டர்களுக்கு தொடர் மருத்துவக் கல்வி நடத்துவதற்காக 500 இருக்கைகள் கொண்ட அல்ட்ரா மாடர்ன் ஆடிட்டோரியம் கவுன்சிலில் அமைக்கப்பட உள்ளது” என்றார்.