தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து மத்திய நிதியைப் பெற போர்க் கால நடவடிக்கை: முதல்வருக்கு திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து மத்திய நிதியைப் பெற போர்க் கால நடவடிக்கை: முதல்வருக்கு திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
Updated on
1 min read

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக் கரசர் வெளியிட்ட அறிக்கை:

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தண் ணீரைப் பெற்றுத் தரவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசு தவறிவிட்டது. இதனால், காவிரி டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி பயிர்கள் முழுமையாக கருகி, விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். சம்பா பயிர்கள் தங்கள் கண் முன்னால் கருகியதை தாங்கிக் கொள்ள முடியாமல் நேற்று முன்தினம் ஒரே நாளில் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் 45 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக தமிழக அரசே செயல்படாமல் முடங்கி இருப்பதால், தற்கொலை சாவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.

தமிழகத்தில் இதுவரை தற்கொலை செய்துகொண்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும். பயிர் இழப்பை ஈடுகட்ட ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், விவசாயத் தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் தொடர்ந்து வேலை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால் தமிழகமே வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. இதற்கிடையே, தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 121 படகுகளை அரசுடைமை ஆக்குவோம் என்று இலங்கை அமைச்சர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 122 படகுகளையும் உடனே விடுவிக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். படகுகளை மீட்க முடியாவிட்டால், மத்திய, மாநில அரசுகள் அதற்கான இழப்பீட்டு தொகையை தமிழக மீனவர்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in