Published : 23 Feb 2014 05:39 PM
Last Updated : 23 Feb 2014 05:39 PM

ராஜீவ் கொலை வழக்கு விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம்: நாராயணசாமி

ராஜீவ் கொலை வழக்கு விவகாரத்தில், அதிமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக, காங்கிரஸின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து புதுச்சேரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

"ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த விவகாரத்தில், ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் இறுதி செய்த தீர்ப்பை மாற்றும் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு உள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்குள் முரண்பாடு உள்ளது. காலதாமதத்தைக் காரணம் காட்டி தற்போது அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தனிப்பட்ட முறையில் ஏற்க மாட்டேன்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு அதிகார தோரணையுடன் செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, மாநில அரசுகளுக்கு அதிகார வரம்பு உள்ளது. அதன்படி இவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.

தமிழக அரசு அனுப்பிய கோப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆறு மணி நேரத்திலேயே தமிழக அரசுக்கு பதில் அளித்துவிட்டது. அதில் தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு நளினி பரோலில் விட மனு தந்தார். அவரை பரோலில் விடக்கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது. தற்போதைய தமிழக அரசின் மாற்றம் புரியாத புதிர். உண்மையில் இது அதிமுகவின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு அவசரம் காட்டியது ஏன்? தேர்தல் காரணமா, அரசியல் காரணமா என தெரியவில்லை" என்றார் நாராயணசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x