

அரசின் வறட்சி நிவாரண அறிவிப்பு கண்துடைப்பாக அமைந்துள்ளது. நிவாரண நிதி குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
மேலும், அறிவிக்கப்பட்ட நிவாரண நிதியை ஏக்கருக்கு ரூ 30 ஆயிரமாக உயர்த்தவும், விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 25 ஆயிரம் வழங்கும் வகையிலும் புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், ''வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கும் அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். கடந்த ஜனவரி 10-ம் தேதி அப்போதைய முதல்வர் வெளியிட்ட அறிவிப்பை எந்தவித மறுபரிசீலனை செய்யாமல் அறிவித்திருப்பது விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நலனுக்கு உதவும் வகையில் அமையவில்லை.
சம்பா சாகுபடிக்கு காவிரி தண்ணீர் கிடைக்காத நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து சாகுபடி செய்யுமாறு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் தமிழகத்தின் அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தரைமட்ட நிலைக்கு தண்ணீர் குறைந்துவிட்டது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காததால் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர்கள் கருகி மடிவதை பார்த்து தற்கொலை செய்தும், அதிர்ச்சியடைந்தும் மரணமடைந்து வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ள நிலையில் 17 குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
மற்ற விவசாயிகள் மரணங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கை பெற்று, அவர்களின் குடும்பத்திற்கும் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் சட்டப்பேரவையில் உறுதியளித்தார். இதனை தற்போதைய முதல்வர் கைகழுவி விட்டாரா? அல்லது அரசை மதித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கைகள் அனுப்பவில்லையா? கடந்த ஆண்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
நடப்பு ஆண்டு சாகுபடி இழப்பை காப்பீட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் கணக்கீடுகள் வெளிப்படையாக அமையுமா? காப்பீடு செய்ய இயலாமல் தவறிப்போன விவசாயிகளின் கதி என்ன? இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
விவசாயத் தொழிலின் உயிர்நாடியான விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்கள் பல மாதங்களாக வேலையிழந்துள்ளன. அதீத வட்டிக்கு கடன்பட்டு, அடிமைநிலை வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி கொடுப்பது குறித்து அரசு சிந்திக்காமல் ஒரு கோடி விவசாயத் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு ரூ25 ஆயிரம் வரை செலவான நிலையில் அரசு வழங்கும் நிவாரண நிதி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்காது. வேலை உறுதியளிப்புத் திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்கவும், தினசரி ஊதியத்தை ரூ 400 ஆக உயர்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் கண்ணீர் வடிக்காமல் தடுத்து அரசு ஆறுதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசின் வறட்சி நிவாரண அறிவிப்பு கண்துடைப்பாக அமைந்துள்ளது. ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் அரசுக்கு அழுத்தம் தருவதை தவிர வேறு வழியில்லாத நிலைக்கு பாதிக்கப்பட்டோர் தள்ளப்பட்டுள்ளனர்.
மக்களின் துயரஉணர்வை பிரதிபலிக்காத வறட்சி நிவாரணநிதி குறித்து அரசு மறுபரிசீலனை செய்து வறட்சியால் மரணமடைந்த அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்கவும் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதியை ஏக்கருக்கு ரூ 30 ஆயிரமாக உயர்த்தவும், விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 25 ஆயிரம் வழங்கும் வகையிலும் புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.