

செவ்வாய் கிரகத்தை முப்பரிமாணத்தில் (3டி) ஆராய்ச்சியாளர்கள் பார்க்க வசதியாக இஸ்ரோவின் எஸ்ஏசி பிரிவு தயாரித்து வரும் மென்பொருள் வசதி ஓராண்டுக்குள் முழுமை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பியுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள் 2 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது. இந்த செயற்கைக்கோளில் அதிநவீன புகைப்படக் கருவியும் இணைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படக் கருவி மூலம் செவ்வாய் கிரகத்தை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
அது மட்டுமல்லாமல் மங்கள்யானில் உள்ள பல கருவிகள் மூலம் பல புதிய கண்டுபிடிப்புகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு மங்கள்யான் அனுப்பும் விவரங்களை இஸ்ரோ ஆய்வு செய்து வருகிறது. மேலும் அவ்வப்போது செவ்வாயின் புகைப்படங்கள் வெளியிடப் படுகின்றன.
மங்கள்யான் அனுப்பும் புகைப்படங் களைப் பயன்படுத்தி அந்த கிரகத்தின் முப்பரிமாண (3டி) காட்சியை இஸ்ரோவின் கீழ் இயங்கும் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் (எஸ்ஏசி) தயாரித்து வருகிறது. இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோள்கள் அனுப்பும் தகவல்களைப் பயன்படுத்தி, விவசாயம், போக்குவரத்து, விண்வெளி ஆராய்ச்சி போன்றவற்றுக்கான கணினி மென்பொருட்களைத் தயாரிப்பது எஸ்ஏசி-ன் பணியாகும்.
அந்த வகையில் செவ்வாய் கிரகத்தின் 3டி காட்சியை தயாரித்து வருகிறது. இதற்காக ‘வேதாஸ்’ என்ற பெயரிலான மென்பொருள் கடந்த ஆண்டுமுதல் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது கிரகத்தின் ஒரு பகுதி 3டி காட்சியாக மாற்றப்பட்டுள்ளது. 3டி மட்டுமல்லாமல் 2டி-யிலும் இந்த வசதி செய்யப்பட்டு வருகிறது.
மயில்சாமி அண்ணாதுரை தகவல்
இதுகுறித்து இஸ்ரோ செயற்கைக் கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:
விண்வெளி ஆய்வாளர்களின் வசதிக்காக 3டி வசதி செய்யப்பட்டு வருகிறது. மங்கள்யான் செயற்கைக்கோள் இன்னும் ஓராண்டுக்கு மேல் செயல்படும். தொடர்ந்து செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்களைப் பயன்படுத்தி, ஓராண்டுக் குள் 3டி வசதி முடிக்கப்படும் என்று தெரிவித்தார். செவ்வாய் கிரகம் மட்டு மல்லாமல் நிலவின் முப்பரிமாண காட்சியையும் எஸ்ஏசி உருவாக்கி வரு கிறது. காட்சிகளை எஸ்ஏசி இணைய தளத்தில் பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.