

மதுரையில் இலவச பரோட்டா, ஆம்லெட் கேட்ட தகராறில், 2 ஏட்டுக்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். எஸ்ஐ, மற்றொரு ஏட்டு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மதுரை கூடல்புதூரில் சோமசுந்தரம் என்பவருக்குச் சொந்தமான ஹோட்டல் செயல்படுகிறது. கடந்த 26-ம் தேதி இரவு போலீஸ் ஜீப்பீல் வந்த ஏட்டு அர்ச்சுனன், அந்த ஹோட்டலில் 4 பரோட்டா, ஒரு ஆம்லெட் பார்சல் கேட்டார். ஊழியர் கார்த்திக் பார்சல் கட்டிக் கொடுத்தார். பணம் கேட்டபோது, ‘‘போலீஸிடமே பணம் கேட்கிறாயா’ என கூறியுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஜீப்பில் இருந்த ஏட்டு மந்தைச்சாமி இறங்கி சென்று, இருவரும் கார்த்திக்கை தாக்கினர்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த கூடல்புதூர் எஸ்ஐ குணசேகரன், ஏட்டு செந்தில்குமார் ஆகியோரும் கார்த்திக்கை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் அருகில் உள்ள வர்த்தக நிறுவனத்தில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இந்த காட்சி, ஊடகங்களில் வெளியானது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ஹோட்டல் உரிமையாளர் சோமசுந்தரம் கூடல்புதூர் போலீஸுக்கு தபாலில் புகார் கடிதம் அனுப்பினார். இதைத் தொடர்ந்து கூடல்புதூர் ஏட்டுகள் மந்தைச்சாமி, அர்ச்சுனன் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்தும், எஸ்ஐ குணசேகரனை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்துக்கும், மற்றொரு ஏட்டு செந்தில்குமாரை அவனியாபுரத்துக்கும் இடமாற்றம் செய்து மதுரை மாநகர காவல் துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் நேற்று உத்தரவிட்டார்.
ஹோட்டல் உரிமையாளர் சோமசுந்தரம் போலீஸாக பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, ‘‘நள்ளிரவு வரை ஹோட்டல் திறந்திருந்ததால், அடைக்கச் சொல்லி வலியுறுத்தினோம். இதற்கு எதிராக போலீஸ் மீதே புகார் தெரிவிக்கின்றனர்’’ என்றனர்.