ஊழல் தொடர்பான புகார் அளிக்க புதிய தொலைபேசி சேவை மையம்

ஊழல் தொடர்பான புகார் அளிக்க புதிய தொலைபேசி சேவை மையம்
Updated on
1 min read

சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஊழலுக்கு எதிரான புதிய தொலைபேசி சேவை மையத்தை கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயம் ஐஏஎஸ் தொடங்கிவைத்தார்.

லஞ்சம், ஊழல், மது ஒழிப்புக்கான தொலைபேசி சேவை மையத்தின் துவக்க விழா, சென்னை தி.நகரில் சனிக்கிழமை நடந்தது. நிகழ்ச்சியில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் செயலாளர் ஜாகீர் உசேன் வரவேற்று பேசினார். தலைவர் சிவ.இளங்கோ, இயக்கத்தின் செயல் திட்டங்களை குறித்து விளக்கினார்.

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் பேசும்போது, ‘‘இந்த மையம் தற்போது காலை 10 முதல் மாலை 5 மணி வரை செயல்படும். வரும் காலங்களில் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

7667-100-100 என்ற எண் கொண்ட தொலைபேசி மையத்தை கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயம் ஐஏஎஸ் தொடங்கிவைத்து பேசியதாவது: சுயநலமாக, வேகமாக ஓடும் மக்கள் மத்தியில், இங்கு பெருந்திரளாக திரண்டுள்ளீர்கள். இதைப் பார்க்கும்போது லஞ்சம், ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஊழலை ஒழிக்க அரசு அலுவலர்களும் மக்களும் மன மாற்றத்துக்கு வர வேண்டும். அதிகாரிகள் நேர்மையாக பணியாற்றினால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

‘அரசியல் ஆசை இல்லை’

12.12.13-ம் தேதியிட்ட ‘தி இந்து’வில் ‘ஆம் ஆத்மி பாணியில் ஊழலுக்கு எதிரான இளைஞர் அமைப்பு - சகாயம் ஐஏஎஸ் டிசம்பர் 15-ல் தொடங்கி வைக்கிறார்’என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. இதுகுறித்து சகாயம் அளித்த விளக்கம்:

‘தி இந்து’ செய்தியைப் படித்துவிட்டு பலர், ஆம் ஆத்மி பாணியில் நான் அரசியல் இயக்கம் தொடங்கப் போவதாக தவறாக புரிந்து கொண்டு விசாரித்தனர். அது எனக்கு வருத்தத்தை அளித்தது. அடிப்படையில் நான் ஒரு அரசு ஊழியன். இந்திய ஆட்சிப் பணி மூலம் சமூகத்தின் மேம்பாட்டுக்காக எவ்வளவு நேர்மையாக கடமை ஆற்ற முடியுமோ அந்த அளவில் பணியாற்றி வருகிறேன்.

இது தவிர, வேறு எந்தவிதமான அரசியல் ஆசையும் எனக்கில்லை. அதற்கான திட்டமும் இல்லை. சமூக தளங்களில் உயர்ந்த பண்பாட்டு நெறியாகிய நேர்மை வித்துக்களை இளைய சமூகத்தினரிடம் விதைத்து வருகிறேன். அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. பண்பாட்டில், நேர்மையில், நீதி உணர்வில் மேம்பட்ட ஒரு தமிழ் சமூகத்தை உருவாக்குவதில் என்னாலான ஒரு சிறிய பங்களிப்பை செய்து வருகிறேனே தவிர, அரசியல் ஆசை எதுவும் இல்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in