Published : 14 Jan 2014 10:33 am

Updated : 06 Jun 2017 18:10 pm

 

Published : 14 Jan 2014 10:33 AM
Last Updated : 06 Jun 2017 06:10 PM

‘பிரகாசமான எதிர்காலம் அமையட்டும்’: கருணாநிதி, தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ் மக்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில், தமிழகத்துக்கு பிரகாசமான எதிர்காலம் அமையட்டும் என கூறியுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி


தைத்திங்கள் முதல்நாள், தமிழ்ச் சமுதாயத்தின் தன்னி கரற்ற பண்பாட்டுத் திருநாளாம் பொங்கல் நன்னாளுடன் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் இணைத்துக் கொண் டாடி மகிழும் அறிவார்ந்த தமிழ்ச் சமுதாய மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துகள். விவசாயப் பெருங்குடி மக்களின் நலமும் வளமும் கருதி, திமுக அரசு அமைந்த காலங்களில் நிறைவேற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு திட்டங்களையும், அவற்றால் தமிழக விவசாயக் குடும்பங்கள் அடைந்த பயன்களையும் இத்திருநாளில் எண்ணி மகிழ்கிறேன்.

கொஞ்சும் மழலைகள், கோலவிழி மாதர்கள், பெற்றெடுத்த தெய்வங்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் சூழ, தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் திருநாள் கொண்டாடி மகிழ உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.

விஜயகாந்த் (தேமுதிக)

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் பொங்கல் திருநாளான இன்றிலிருந்தாவது எதிர்வரும் காலங் களில் தமிழக மக்கள் கஷ்டங்கள் நீங்கி வாழ வேண்டும். ஒரு நல்ல எதிர்காலம் தமிழகத்துக்கு அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இந்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் முடிவு தமிழக மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டும். பொங்கல் திருநாளில் பெற்றோர், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து மகிழ்ந்து கொண்டாட வேண்டும். அனைவருக்கும் இதயம்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பி.எஸ்.ஞானதேசிகன் (தமிழக காங்கிரஸ்)

உழவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களையும் மகிழ்விக்கும் நாள் தைப்பொங்கல் திருநாள். வேளாண் பெருமக்களின் ரூ.70 ஆயிரம் கோடி கடன்கள் முழுவதுமாய் ரத்து, குறைந்த வட்டியில் மீண்டும் கடன், உணவுப் பாதுகாப்புச் சட்டம் வரை மக்களுக்கு நலமும் வளமும் தரும் மத்திய அரசின் எண்ணற்ற திட்டங்களை நினைவில் கொள்வோம். நாட்டில் சாதி, மத, மொழி வேறுபாடுகளை மறந்து, மனிதநேய நல்லிணக்கம் நிமிர்ந்து, ஒற்றுமை, சமாதானம் நிறைந்து விளங்கிட இணைந்து மகிழ்வோம். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

வைகோ (மதிமுக)

உலகத்தில் மனித குலத்தின் பசி போக்கிடும் உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், இயற்கையின் அருட்கொடையான நிலத்துக்கும் பயிர் செழிக்கப் பயன்படும் உழவு மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கின்ற விழாதான் தைப் பொங்கல் திருநாள். பண்டைக்காலம் முதல் தமிழர்கள் கொண் டாடும் தேசியத் திருவிழாவாகும். வருங்காலம் தமிழர் களுக்கு ஒளிமயமான காலமாக அமையும் என்ற நிறைந்த நம்பிக்கையுடன் தாய்த் தமிழகத்திலும், தமிழ் ஈழத்திலும், தரணி எங்கும் வாழும் தமிழர்களுக்கு நேச உணர்வுடன் இனிய பொங்கல் வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் ராமதாஸ் (பாமக)

கடந்த இரு ஆண்டுகளாகவே இயற்கை சீற்றங்களாலும், ஆட்சியாளர்களின் செயற்கை சீற்றங்களாலும் மக்கள் பல்வேறு துயரங்களுக்கு ஆளானார்கள். ஆனாலும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கிணங்க தேசிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாகவும் இந்த தமிழ்ப் புத்தாண்டு அமையும். அனைவருக்கும் கல்வி, வேலை, லாபம் தரும் உழவுத் தொழில், குடிசைகள் இல்லாத மாநிலம், ஏழ்மையில்லாத தமிழகம், மதுவில்லா பூமி என உன்னதமான தமிழ்நாட்டை உருவாக்க இந்த தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளில் தமிழர்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்)

தாராளமயமாக்கல் கொள்கையால் நாடு பெரும் இன்னலைச் சந்தித்து வருகிறது. இந்தக் கொள்கைதான் இந்திய விவசாயத்துக்கும் பெரும் அச் சுறுத்தலாக எழுந்துள்ளது. தேசத்தின் இறை யாண்மையை, ஒற்றுமையைப் பாதுகாத்து சமத்துவப் பொங்கல் வைக்க இந்த இனிய நாளில் சபதமேற்போம்.

தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்)

தமிழக மக்களின் உணர்வுகளையும் ஜனநாயக கோரிக்கைகளையும் புரிந்து, ஏற்று நிறைவேற்றக்கூடிய நல்லரசை மத்தி யில் அமைக்கவும் அதில் தமிழகம் தலைமை தாங்கக்கூடிய வாய்ப்புக்கு ஆதரவு பெருகி வருகிறது. மக்களிடம் நல்லிணக்கத்தை வளர்க்கவும், இந்திய அறிவு, தொழில், விஞ்ஞான அறிவை முழுமையாகப் பயன் படுத்தக்கூடிய மக்களின் நலன் நாடும் அரசை மத்தியில் அமைக்க பொங்கல் நன்னாளன்று உறுதியேற்போம்.

கி.வீரமணி (திராவிடர் கழகம்)

தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமான பொங்கல் திருநாள், திராவிடர் திருநாள். உழைப்பைப் போற்றி நன்றியைக் குவிக்கும் பொன்னாள். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கட்டும். அதுவே சமூகநீதி என்ற நிலை நிலைக்கட்டும்.

சமத்துவ மக்கள் கட்சித் நிறுவனத் தலைவர் சரத்குமார், காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மதச்சார்பற்ற ஜனதா தள மாநிலப் பொதுச் செயலாளர் கரு.பவுனாச்சாரி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


பொங்கல் வாழ்த்துஅரசியல் தலைவர்கள்கருணாநிதிவிஜயகாந்த்வீரமணி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x