முல்லை பெரியாறு அணையில் மத்திய குழு ஆய்வு: கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவில்லை

முல்லை பெரியாறு அணையில் மத்திய குழு ஆய்வு: கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவில்லை
Updated on
1 min read

முல்லை பெரியாறு அணையில் உள்ள ஷட்டர் பகுதி, நீர்க்கசிவு நிலை குறித்து மத்திய துணைக் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். ஆய்வுக்குப் பின், வழக்கமாக நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டம் இந்த முறை நடைபெறவில்லை.

முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு மற்றும் கண்காணிப்புப் பணிக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு உதவியாக மத்திய துணைக் குழு அமைக்கப்பட்டது. துணைக் குழு அணையின் நிலைமை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து, மத்தியக் குழுவிடம் அறிக்கை தாக்கல் செய்யும்.

இந்நிலையில், மத்திய துணைக் குழுவின் தலைவரும், மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளருமான அம்பர்ஜி ஹரீஷ் கிரீஷ் தலைமையில், தமிழக பிரதிநிதிகளான முல்லை பெரியாறு அணை செயற்பொறியாளர் மாதவன், உதவி செயற்பொறியாளர் சாம்இர்வின், கேரள பிரதிநிதிகளான நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஜார்ஜ் டேனியல், உதவி செயற் பொறியாளர் பிரசீத் என குழுவில் இடம்பெற்றிருந்த 5 பேரும் நேற்று காலை 11 மணிக்கு தேக்கடி நீர்த்தேக்கப் பகுதிக்கு வந்தனர்.

அங்கிருந்து கேரள பிரதிநிதிகள் தனி படகிலும், தலைவர் உள்ளிட்ட தமிழக பிரதிநிதிகள் ஒரு படகிலும் அணைப் பகுதிக்கு சென்றனர். பிரதான அணை (மெயின் டேம்), பேபி அணை, மதகு பகுதிகளில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, அணையின் நீர்க்கசிவு நிலை குறித்தும் ஆய்வு செய்தனர். பகல் 2.30 மணிக்கு மேல் அவர்கள் கரைக்கு திரும்பினர். வழக்கமாக, அணையை ஆய்வு செய்த பிறகு குமுளியில் மத்திய துணைக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும். ஆனால், இந்தமுறை கலந்தாய்வு நடைபெறவில்லை.

முல்லை பெரியாறு அணையில் மேற்கொண்ட ஆய்வு தொடர்பாக, துணைக் குழுவினர் மூவர் குழுவிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in