Published : 17 Jan 2017 03:08 PM
Last Updated : 17 Jan 2017 03:08 PM

அதிமுகவை உடைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை: நடராஜனுக்கு தமிழிசை பதிலடி

இன்னொரு கட்சியை உதிரவைத்து அதை அடைவதற்கான அவசியம் பாஜகவுக்கு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

முன்னதாக எம்.நடராஜன், ''தமிழகத்தில் பெரும்பான்மையுடன் ஆளும் அதிமுகவை உடைக்க மத்திய பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவர்களுடைய திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. தமிழகத்தை காவியமயமாக்கும் பாஜகவின் எண்ணம் எடுபடாது. அதிமுகவை உடைக்கும் பிரதமர் மோடியின் எண்ணமும் நிறைவேறாது. கட்சியையும் எங்களையும் அழிக்க நினைக்கும் பாஜகவை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்'' என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ''இன்னொரு கட்சியை உதிரவைத்து அதை அடைவதற்கான அவசியம் பாஜகவுக்கு இல்லை'' என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை தமிழிசை வெளியிட்ட அறிக்கையில், ''தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவில் பாஜகவை தாக்கி இருக்கிறார் நடராஜன். ஆவியைப் பார்த்து பயப்படுவதை போலவே காவியை பார்த்து பயப்படுவதாக எண்ணி காவிமயமாக்கப்படுகிறது என்றும் கூறி இருக்கிறார், அது மட்டுமல்ல அதிமுகவை உடைக்கப் பார்க்கிறது, குழப்பம் விளைவிக்க பார்க்கிறது மத்திய அரசு. பாஜகவை இங்கு வளர விடமாட்டோம் என்றெல்லாம் சூளுரைத்திருக்கிறார். ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சி ஏன் இப்படி அரண்டுபோய் பேசுகிறது என்று எனக்கு தெரியவில்லை.

அதுமட்டுமல்ல எந்த விதத்தில் குழப்பம் விளைவிக்க முயற்சித்தோம், எந்த விதத்தில் உடைக்க முயற்சித்தோம், எந்த விதத்தில் அவர்களின் உட்கட்சிப் பிரச்சனையில் நாங்கள் தலையிடுகிறோம் என்பதற்கான ஆதாரங்களை சொல்லிவிட்டு அவர் இந்த குற்றச்சாட்டை சொல்லட்டும்.

ஜனநாயக முறைப்படி அதிமுகவில் எந்தக் குழப்பமும் வந்து விடக் கூடாது என்ற காரணத்திற்காக ஜெயலலிதா இறந்த அந்த நடு இரவே ஆளுநர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணத்தை செய்து வைத்தார். எந்த விதத்திலும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரு ஆட்சியில் குழப்பம் வந்த விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான், குழப்பம் விளைவிக்க வேண்டும் என்றால், சுயலாபம் பெற வேண்டும் என்றால் அன்றே அது பாஜகவால் பெற்றிருக்க முடியும்.

அதுமட்டுமல்ல இப்படி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, அந்தக் கட்சியின் அடிப்படையில் எந்த அதிகாரமும் இல்லாத நடராஜன் எப்படி சொல்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது உண்மையான அன்போடு நட்பு பாராட்டிய மோடி குழப்பம் விளைவித்தாரா? இல்லையென்றால் நடையை கட்டுங்கள் என்று சொன்ன நடராஜர்கள் குழப்பம் விளைவித்தார்களா என்பது அந்தக் கட்சியில் உள்ள தொண்டர்களுக்கும் தெரியும் தமிழக மக்களுக்கும் தெரியும்.

இன்னும் சொல்லப்போனால் பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்கலாம் என்று சொல்கிறார் நடராஜன். அதிகாரபூர்வமான ஆட்சியில் இருக்கும் பாஜகவும் அதைத்தான் சொல்கிறது ஆனால் பன்னீர்செல்வம் நீடிக்கலாம் என்று சொன்னால் முதல்வர் நீடிப்பதை பற்றிய முடிவையே இவர் எடுப்பதை போலவே பேசுகிறார் என்றால் குழப்பம் யாரால் ஏற்பட்டு இருப்பது என்பதை மக்கள் நன்றாக உணர்வார்கள்.

ஏன் இன்று பாஜகவைப் பார்த்து இவர்கள் பயப்படுகிறார்கள், முற்றிலுமாக அவர்களின் பொங்கல் விழா நோக்கமே பாஜகவை குறிவைத்துப் பேசுவது என்பதே பாஜக தமிழகத்தில் அவர்களுக்கு சவாலாக இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

எங்களைப் பொறுத்தமட்டில் தமிழகத்தை வளர்ச்சி மையமாக்க வேண்டும் அதற்கு எங்களை வளர்த்து எங்களை வளர்ச்சி அடைய செய்து எங்கள் கட்சியை உறுதியாக்கி நாங்கள் அதை அடைவோமே தவிர , இன்னொரு கட்சியை உதிரவைத்து அதை அடைவதற்கான அவசியம் பாஜகவிற்கு இல்லை.

எம்ஜிஆர் உயிரோடு இருந்தால் அவர் பாஜகவை தான் ஆதரித்து இருப்பார். ஏன் இன்று நாமெல்லாம் வருத்தமடைந்திருக்கும் உயிரிழந்த ஜெயலலிதா இருந்தாலும் கூட இன்று பாஜகவைதான் ஆதரித்து இருப்பார்.

ஏன் இன்று பாஜகவை பார்த்து இவர்கள் இப்படி பரிதவிக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை ஆனால் பாஜகவின் உண்மை தன்மையை விளக்க வேண்டியது எனது கடமை என்பதற்காகவே நான் இந்த பதில் அறிக்கையை தருகிறேன்'' என்று தமிழிசை கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x