

தமிழகத்தில் நாளை வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக சுமார் 3 லட்சம் லாரிகள் ஓடாது என, நாமக்கல்லில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம் மேளன தலைவர் ஆர்.குமாரசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற கலவரத்தில் 60 லாரிகள், 50 பேருந்துகள் மற்றும் ஏராளமான தமிழகத்தைச் சேர்ந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. லாரி உரிமையாளர்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்ட சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. இந்த கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறிய கர்நாடக அரசைக் கண்டிக்கிறோம்.
மத்திய அரசு தேசிய பேரிடர் வாரியம் மூலம் சேதமடைந்த வாகன உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கம்பெனிகள் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலி யுறுத்தி நாளை (16-ம் தேதி) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் லாரிகளை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.
ரூ.1,000 கோடி இழப்பு
தமிழகத்தில் லாரிகள், ட்ரெய்லர் லாரிகள், டேங்கர் லாரிகள் என சுமார் 3 லட்சம் சரக்கு வாகனங்கள் நாளை ஓடாது. இதனால் சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படும். தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரம் லாரிகள் தினசரி கர்நாடக மாநிலத்துக்கும், கர்நாடகா வழியாக வட மாநிலங்களுக்கும் சென்று வருகின்றன. கடந்த ஒரு வாரமாக இந்த லாரிகள் செல்ல முடியவில்லை.
கர்நாடகாவில் இதே நிலை நீடித்தால் ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மூலம் அனைத்து மாநில லாரிகளும் கர்நாடகாவுக் குள் செல்லாமல் மாற்று வழிகளில் வட மாநிலங்களுக்கு செல்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.