

வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களையும் அதிமுக கைப்பற்ற தொண்டர்கள் கடுமையாக உழைக்கவேண்டும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி வேண்டுகோள் விடுத்தார்.
ஆம்பூரில் நேற்று உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆம்பூர் நகரச் செயலாளர் மதியழகன் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் பாலசுப்பிரமணியம் (ஆம்பூர்), ஜெயந்தி (குடியாத்தம்), வேலூர் மேயர் கார்த்தியாயினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் அதிமுக 7 இடங்களை கைப்பற்றின. வேலூர், திருப்பத்தூர் போன்ற தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியை தழுவின.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 91 சதவீதம் வெற்றி பெற்றது. அதுவே நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி அடைந்தோம். அரசின் சாதனைகளே இதற்கு காரணம். இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி பொறுப்பேற்று பல திட்டங்களை அறிவித்துள்ளன.
அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச்சென்றாலே முழு வெற்றி அதிமுகவுக்கு கிடைக்கும். எனவே, அதிமுக தொண்டர்கள் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வேலையை தொடங்கவேண்டும். அதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் மேயர் பதவி உட்பட அனைத்து உள்ளாட்சி பதவிகளையும் அதிமுக கைப்பற்ற தொண்டர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்’’ என்றார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் நிலோபர், மாவட்ட இணைச் செயலாளர் சந்திரா சேட்டு, மாவட்ட இளைஞரணி செயலாளர் டில்லிபாபு, மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், ஆம்பூர் தொகுதி செயலாளர் வெங்கசேடன், மாதனூர் ஒன்றியச் செயலாளர் ஜோதி ராமலிங்கராஜா, குடியாத்தம் நகராட்சித் தலைவர் அமுதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.