

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை மலேசிய கல்வி அமைச்சர் கமலநாதன் சந்தித்து, அக்டோபரில் மலேசியாவில் நடக்கவுள்ள வரலாற்று திருவிழா வுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
மலேசிய நாட்டில் உள்ள பினாங்கில் தமிழ்ப் பள்ளி தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு அங்கு அக்டோபரில் ‘வரலாற்று திருவிழா’ என்ற நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை மலேசிய கல்வித்துறை அமைச்சர் கமலநாதன் நேற்று இரவு அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது வரலாற்று திருவிழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
ஸ்டாலினுடன் சந்திப்பு
அதேபோல் திமுக பொருளாள ரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய மலேசிய அமைச்சர் கமலநாதன், வரலாற்று திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். மேலும், விழா தொடர்பாக ஸ்டாலினுடன் அவர் ஆலோசனையும் நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது சிங்கப்பூரைச் சேர்ந்த ஜோகூவா குமார், மலேசிய கல்வித்துறை உயரதிகாரி தினேஷ் தினகரன் மற்றும் மலேசிய தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவினர், மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ தியாக ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
இத்தகவலை திமுக அலுவலகம் தெரிவித்துள்ளது.