

நாட்டின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் ஆபத்தான வெடிமருந்துப் பொருளான அமோனியம் நைட்ரேட்டை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், சென்னை துறைமுகத்துக்கு வந்திறங்கியுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
கரூரை சேர்ந்த அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் பி.குமரேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
எங்கள் நிறுவனம் அரவக்குறிச்சி அருகே ஆலை அமைத்து 2008 முதல் அமோனியம் நைட்ரேட்டை இருப்பு வைத்து விற்பனை செய்கிறது. 2012-ல் அமோனியம் நைட்ரேட்டுக்கு என தனியாக பாதுகாப்பு விதிகள் உருவாக்கப்பட்டதால், அதை இருப்பு வைத்து விற்க 2014-ல் அனுமதி பெற்றோம். அந்த அனுமதி 2019 வரை உள்ளது.
இந்நிலையில், சீனா, கொரியா போன்ற நாடுகளில் இருந்து அமோனியம் நைட்ரேட்டை இறக்குமதி செய்ய அனுமதி கோரி நாக்பூரில் உள்ள மத்திய முதன்மை வெடிபொருள் கட்டுப் பாட்டாளருக்கு விண்ணப்பித்தோம். அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் அனுமதி மறுத்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, எங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை சென்னையில் உள்ள இணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டாளர் கடந்த மே 20-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளார். இந்த உத்தரவு சட்டவிரோதமானது.
எங்கள் நிறுவனத்துக்கு கொரியாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட 740 டன் அமோனியம் நைட்ரேட்டை சென்னை துறைமுகத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து ஏலம் விடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். எனவே, நாக்பூர் மற்றும் சென்னை வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, அமோனியம் நைட்ரேட் இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை ஏற்கெனவே நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு நடந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், மத்திய அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி வாதிட்டனர். வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் தனிப்பட்ட நலனைவிட நாட்டின் நலன்தான் முக்கியம். அமோனியம் நைட்ரேட் ஆபத்தான வெடிமருந்து மூலப்பொருள். அடிக்கடி நடக்கும் குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுதான் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘2012 முதல் இதுவரை 20 ஆயிரம் டன் அமோனியம் நைட்ரேட் மாயமாகியுள்ளது. தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் 20 கிலோ அமோனியம் நைட்ரேட்டில் இருந்து 20 வெடிகுண்டுகளை தயாரிக்க முடியும்’ என்று உளவுத்துறையினர் அதிர்ச்சிகர தகவல் தெரிவித்துள்ளனர்.
மனுதாரர் விவசாயத் தேவைக்காக அமோனியம் நைட்ரேட் இறக்குமதி செய்வதாக கூறி, அதை பெங்களூருவில் உள்ள குவாரிகளுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளார். ஏற்கெனவே சென்னை துறைமுகத்தில் 696 டன், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் 500 டன் சட்டவிரோதமாக இறக்குமதி செய்துள்ளார்.
ஆபத்தான அமோனியம் நைட்ரேட்டை மத்திய அரசின் அனுமதியின்றி இறக்குமதி செய்யக்கூடாது; துறைமுகங்களில் இருப்பு வைக்கக்கூடாது என கடும் விதிமுறைகள் இருந்தும், அதை மீறி நாட்டின் நலனுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் மனுதாரர் 740 டன் அளவுக்கு கொரியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளார்.
இந்த வழக்கில் மத்திய அரசு அதிகாரிகள் சரியான நடவடிக்கைதான் எடுத்துள்ளனர். அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. ஆனால், அவர் அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு மாதத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டை சட்டத்துக்கு உட்பட்டு அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.