

தமிழகத்தை காப்பாற்ற ஸ்டாலினால் மட்டும்தான் முடியும் என்று அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த நடிகர் ராதாரவி தெரிவித்தார்.
நடிகரும் அதிமுக பிரமுகரு மான ராதாரவி நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னி லையில் திமுகவில் இணைந்தார். ஸ்டாலின் பிறந்த நாளை முன் னிட்டு அவருக்கு வாழ்த்து தெரி வித்தார்.
பின்னர் நிருபர்களுக்கு ராதாரவி அளித்த பேட்டி: திமுகவில் இணைந்தது எனது குடும்பத்தோடு இருப்பதைப் போன்ற எண்ணத்தைத் தருகிறது. இந்தத் தேர்தலில் மட்டுமல்ல வேறு எந்தத் தேர்தலிலும் திமுகவே ஆளும் என்பது எனது எண்ணம். முழுமையாக இருக்கும் ஒரே இயக்கம் திமுக. தமிழ் எண்ணம் கொண்டவர்கள் இருக்கும் ஒரே இயக்கம் திமுகதான்.
எல்லோரும் சிதறு தேங்காய் போல சிதறிக் கிடப்பதால் தமிழகத் தைக் காப்பதற்கு ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் இல்லை. அரசியலில் நீண்ட அனுபவம் உள்ள தலைவராக ஸ்டாலின் திகழ் கிறார். எனவே, அத்தனை பேரும் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். நான் திமுகவில் இணைய வேண்டும் என்று நீண்ட நாளாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் நான் நம்பி இருந்தவர் இறந்துவிட்டார்.
எனது தாய் இறந்தபோது யாரும் வராத நிலையில், மு.க.ஸ்டாலின் மட்டும் தைரியமாக வந்து ஆறுதல் கூறினார். அதனால்தான் எனது தாய் இறந்த நாளான இன்று (பிப்.28) திமுகவில் வந்து சேருவேன் என்று கூறியிருந்தேன். அதன்படி தாய்க்கழகத்தில் வந்து சேர்ந்துள்ளேன். நாளை (மார்ச் 1) ஸ்டாலின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். நாளை தங்கசாலையில் நடை பெறும் பொதுக் கூட்டத்தில் பேசும் போது எனது முழு கருத்தையும் தெரிவிப்பேன்.
நான் எப்போதும் பதவிக்காக செல்பவன் அல்ல. இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக வில்தான் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்.
இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் மக்களுக்காகப் பாடுபடும் கட்சியாக திமுக மட்டுமே இருக்கும் என்று நான் மட்டுமல்ல பொதுமக்களும் நம்பு கின்றனர். என்னைப் போலவே அதிமுகவில் இருந்து நிறைய பேர் விலகி திமுகவில் இணைவார்கள் என்றார் ராதாரவி.