

நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு வசதியாக தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு முறைக்கு மாற்றுத் தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:
தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு அடுத்த கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது அனைத்து மாநில மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள்தான் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்படும்.
தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வில், சிபிஎஸ்சி, என்சிஆர்டி ஆகிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே கேள்வித்தாள் தயாரிக்கப்படுகிறது. பல்வேறு பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட பாடத்திட்டத்தின்கீழ் மட்டும் உள்ள வினாத்தாளுக்கு விடை அளிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். இந்த விஷயத்தில் மாநிலங்களின் கோரிக்கைகளை புறக்கணித்து, தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு மசோதாவை நிறைவேற்றியிருப்பது மாநில அரசு உரிமைகளைப் பறிப்பதுடன் அரசியல் சாசனத்துக்கும் எதிராகவும் மத்திய அரசு செயல்பட்டுள்ளது.
எனவே, அனைத்து தரப்பு மாணவர்களும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு வசதியாக தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அல்லது கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாநில பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து அதன்மூலம் மாற்றுத் தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அறிக்கையில் ஜி.கே.வாசன் கோரியுள்ளார்.