

ஐஆர்சிடிசி இணையதளத்தில் உள்ள குளறுபடியால் முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் கீழ் படுக்கை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே, அதில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டு மென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்களில் தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவின் போது, இருக்கை அல்லது படுக்கை வசதி இருப்பு நிலை, காத்திருப்பு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் வெளிப் படையாக காண முடிகிறது. முதியோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பெரும்பாலும் கீழ் படுக்கைதான் வசதியாக இருக்கும். ஆனால், முன்பதிவின்போது அதிகளவில் இருப்பு இருந்தால் மட்டுமே இவர்களுக்கு கீழ் படுக்கை கிடைக்கும். பெரும்பாலான நேரங் களில் கிடைப்பதில்லை. இதனால், அவர்கள் ரயில் பயணத்தின்போது கடுமையாக அவதிப்படுகின்றனர்.
டிக்கெட் முன்பதிவு செய்யும் போது முதியோர், கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு தேவையான கீழ் படுக்கை இருப்பு விவரங்கள் வெளிப்படையாக இருப்பதில்லை. ஐஆர்சிடிசி இணையதளத்தில் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள முன்னுரிமை பிரிவில் கட்டணம் செலுத்திய பின், கீழ் படுக்கை இல்லை என காட்டுகிறது. அதற்குப் பதிலாக வேறொரு இடத்தில் நடு அல்லது மேல் படுக்கை வசதியை உறுதி செய்கிறது. இதனால், ஏமாற்றமடையும் முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் தங்களது பயணத்தை திடீரென ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இது தொடர்பாக மூத்த குடிமக் கள் நல அமைப்பின் செயலாளர் வி.ராமாராவ் கூறியதாவது:
முதியோர், மாற்றுத்திறனாளி கள், கர்ப்பிணிகள், நோயாளி களுக்கு ரயிலில் கீழ் படுக்கை வசதி பெரும்பாலும் கிடைப்பதில்லை. இதனால், அவர்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். கீழ் படுக்கை பெற முன்பதிவு செய்தால், நடுப்பகுதி அல்லது மேல் பகுதியில்தான் படுக்கை வசதி கிடைக்கிறது. இதனால், பயணம் செய்ய முடியாமல் டிக்கெட்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ரத்து செய்யும்போது, உறுதி செய்யப்பட்ட டிக்கெட் என்றால் 50 சதவீத கட்டணமும், காத்திருப்பு பட்டியலில் இருக்கும் டிக்கெட் ஒன்றுக்கு ரூ.60-ம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால், நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம்.
வழக்கமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இருப்பது போல் முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு கீழ் படுக்கை விவரங்களை வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும். இதற்கு ஏற்றவாறு மென்பொருளை மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.