Published : 14 Apr 2017 01:46 PM
Last Updated : 14 Apr 2017 01:46 PM

உச்ச நீதிமன்றக் கண்டனம் அரசின் காதுகளில் விழுமா?- ராமதாஸ்

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகாவது விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக முதலைமைச்சர் பழனிச்சாமி உடனடியாக கூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் விவசாயிகள் அனுபவித்து வரும் துயரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் அடிமனதின் ஆழத்திலிருந்து வெளிவந்த நேர்மையான உணர்வுகள் ஆகும்.

தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனில் எங்கோ உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு உள்ள அக்கறைக் கூட தமிழக ஆட்சியாளர்களுக்கு இல்லாதது கவலையளிக்கிறது. அரசின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி தொடரப்பட்ட பொதுநலவழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை தொடர்பான துயரங்கள் உணர்வுள்ள ஆன்மாவின் மனசாட்சியை உலுக்கிப் பார்க்கும் சக்தி கொண்டவை. வறட்சி, கடன் தொல்லை மற்றும் வேறு சில காரணங்களால் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயிகளின் காவலன் தமிழக அரசு தான் என்ற முறையில் அவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் அல்லது அதை பேரிடராக கருதி நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். அதை செய்யாமல் அமைதியாக இருப்பது பிரச்சினைகளுக்கு தீர்வு அல்ல" என்று கூறி கண்டித்திருக்கிறது. இப்பிரச்சினையில் தமிழக அரசின் அலட்சியத்துக்கு இதைவிட கடுமையான சாட்டையடி தர முடியாது.

தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, அவர்கள் ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்கள் போலவும், அவர்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைப் போலவும் தான் தமிழக அரசின் அணுகுமுறை உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் தொடங்கி இன்றுவரை 325-க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்தும், அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டும் இறந்துள்ளனர்.

இன்னும் உழவர்களின் தற்கொலை தொடர்கிறது. நேற்று கூட கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் பச்சக்கவுண்டன் பாளையம் என்ற இடத்தில், ஆழ்துளை கிணறு அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆனால், உழவர்களின் தற்கொலை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் நடக்கும் சோகங்களை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கிறது.

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிப்பதற்கான ஆணையை 10.01.2017 அன்று வெளியிட்ட அப்போதைய முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமிழகத்தில் 17 உழவர்கள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாகவும், மற்ற விவசாயிகளின் தற்கொலைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விசாரணை நடத்தி அதனடிப்படையில் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். பின்னர் பிப்ரவரி 22-ஆம் தேதி இப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பிலும் இதே தகவலை தெரிவித்திருந்தார். இதுகுறித்த முதல் அறிவிப்பு வெளியாகி 100 நாட்கள் நிறைவடையப்போகின்றன. அப்போது 190 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்திருந்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை 325-ஐ தாண்டிவிட்டது. ஆனால், இதுவரை மாவட்ட ஆட்சியர் விசாரணை முடிந்ததாக தெரியவில்லை. இன்னும் கேட்டால் அப்படி ஒரு விசாரணை நடத்தப்பட்டதாகவே தெரியவில்லை. விவசாயிகளை ஏமாற்றுவதற்காவே அப்படி ஓர் அறிவிப்பை அரசு வெளியிட்டதாக தெரிகிறது.

பொதுத்துறை வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; நிவாரண உதவியை உயர்த்தி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முதல் தில்லி வரை ஏராளமான உழவர் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால், அவர்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிய வேண்டும் என்ற எண்ணம் கூட அரசுக்கு ஏற்படவில்லை. பிப்ரவரி மாதம் முதல் முதலமைச்சர் போட்டியிலும், மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் மட்டும் தீவிரம் காட்டிய ஆட்சியாளர்களால் உழவர்களின் பிரச்சினைகளை கேட்டறிய ஒரு மணி நேரம் ஒதுக்க முடியவில்லை. இதைவிட மோசமான மனிதநேயமற்ற அரசு இருக்கமுடியாது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்டனத்திற்கு பிறகாவது விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும். அனைத்துக்கும் மத்திய அரசின் உதவியை எதிர்பார்க்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், தமிழக விவசாயிகளின் பொதுத்துறை வங்கிக் கடனை தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும்.

உத்தரப்பிரதேச அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து விட்டு, அதை ஈடுகட்ட மத்திய அரசின் நிதியுதவியை கோருவதைப் போன்று, தமிழக அரசும் பொதுத்துறை வங்கிக்கடனை தள்ளுபடி செய்துவிட்டு மத்திய அரசின் நிதியுதவியைக் கோரலாம். விவசயிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கலாம். இதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக முதலைமைச்சர் பழனிச்சாமி உடனடியாக கூட்ட வேண்டும்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x