

கோவையில் ஒரே நாளில் நான்கு பேரைக் கொன்ற ஒற்றை யானையின் கடந்த காலம் வேறு மாதிரியானது. சாந்தமாக சுற்றி வந்த யானையின் குணம், கடந்த 4 நாட்களில்தான் மூர்க்கத்தனமாக மாறியுள்ளது. மஸ்து பிடித்ததே அதற்குக் காரணம். கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த யானை, கடந்த ஒரு வருடமாக கோவை மருதமலை வனப்பகுதி யில் சுற்றிவந்தது.
கூட்டத்துடன் இணையாமல் தனியாகவே சுற்றி வந்த யானை, சில தினங்களுக்கு முன்பாக மதுக்கரை வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது. காட்டிலிருந்து வெளி யேறி ஊருக்குள் ஊடுருவி அடிக் கடி அச்சுறுத்தியது. கடந்த மாதம் 31-ம் தேதி பி.கே.புதூர் அருகே வழக்கமான யானை வழித்தடத் தில் வந்து பாலக்காடு சாலையை மறித்தது. போக்குவரத்து பாதித்து மக்களை அச்சுறுத்தத் தொடங் கியதால், வனத்துறையினர் விரட்ட முற்பட்டனர்.
அன்றைய தினமே கார்த்திக், விஜயகுமார் என்ற இரு வேட்டை தடுப்புக் காவலர்களைத் தாக்கி தனது மூர்க்கத்தனத்தை காட்டியது. யானை வந்த வழி யாகவே அதை வனத்துக்குள் விரட்டுவதிலேயே வனத்துறை குறியாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு வரை இந்தப் பணி தொடர்ந்தது. வனத்தினுள் யானை சென்றுவிட்டது என நிம் மதி அடைந்த நேரத்தில் வேறு வழியில் காட்டிலிருந்து வெளியே றியது அந்த ஒற்றை யானை.
மதுக்கரை வன எல்லையி லிருந்து மதுக்கரை மார்க்கெட் வழியாக, சிட்கோ, போத்தனூர் சென்று, அங்கிருந்து வெள்ளலூர் வரை சுமார் 12 கி.மீட்டர் தூரம் வனத்துறையினர் கண்காணிப்பை மீறியே யானை ஊடுருவியது. அதிலும் செட்டிபாளையம் சாலை மார்க்கமாகவே சுமார் 4 கி.மீ தொலைவுக்கு நடந்து சென்றுள் ளது. அடுத்தடுத்து உயிரிழப்பு களை ஏற்படுத்தியபோதும் வனத் துறையினருக்கு உடனடியாக தகவல் கிடைக்கவில்லை. தகவல் கிடைத்து அங்கு செல் வதற்குள் அடுத்த உயிரிழப்பு ஏற்பட்டது வனத்துறையினருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இதுவே முதல்முறை
3 மணி நேர இடைவெளியில் ஒரு யானை நான்கு பேரை கொன்று, பலருக்கு காயங்களை யும், ஏராளமான சேதங்களையும் ஏற்படுத்தியிருப்பது தமிழகத்தில் இதுவே முதல்முறை. அதிக ஆக்ரோஷமாக இருந்ததால், இந்த யானையைப் பிடிக்க 4 கும்கிகள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. டாப்சிலிப்பில் இருந்து 3 கும்கிகள், சாடிவயல் பாரி என 4 கும்கிகளைப் பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டது. ஆனால் டாப்சிலிப் கும்கிகள் வர தாமதம் ஆனது.
இதையடுத்து, வேறு வழியின்றி பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 2 முறை மயக்க ஊசி செலுத்தியதால் யானை ஆழ்ந்த மயக்க நிலைக்குச் சென்றது. இந்த சமயத்தில் 6 பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி அதை லாரியில் ஏற்றினர். கும்கி பாரி பக்கபலமாக நின்றது. அதிக சேதத்தை ஏற்படுத்தி அச்சுறுத்திய காட்டு யானையை இயந்திரங்களை மட்டுமே வைத்துப் பிடித்திருப்பது இதுவே முதல்முறை என்கின்றனர் வனத்துறையினர்.
அரசு நிதியுதவி
பலியான 4 பேரின் குடும்பத் தினருக்கு தலா ரூ.4 லட்சம், காயமடைந்தவர்களில் 3 பேருக்கு தலா ரூ.59,100 என, மொத்தம் ரூ.17.77 லட்சம் நிதியை அமைச்சர்கள் வழங்கினர்.