Published : 18 Sep 2016 08:26 AM
Last Updated : 18 Sep 2016 08:26 AM

திமுகவை யாரும் அசைக்க முடியாத இயக்கமாக மாற்றுவேன்: முப்பெரும் விழாவில் கருணாநிதி சபதம்

திமுகவை யாரும் அசைக்க முடியாத இயக்கமாக மாற்றுவேன் என்று திமுக முப்பெரும் விழாவில் அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறினார்.

திமுகவின் முப்பெரும் விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கி கருணாநிதி பேசியதாவது:

திமுகவின் முப்பெரும் விழா எழுச்சியுடன் நடக்கிறது. திமுகவை வலுவான இயக்கமாக ஆக்கும் பணியில் நாம் ஈடுபட்டுள்ளோம். பேராசிரியர் அன்பழகனும், நானும் 10 வயது முதலே நண்பர்களாக உள்ளோம். எங்கள் இருவருக்கும் இடையே உள்ள நட்பை யாராலும் பிரிக்க முடியாது. அதே போல் கட்சியின் தொண்டர்களையும், தமிழக மக்களையும் திமுகவிடமிருந்து யாரும் பிரிக்க முடியாது.

இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக பலர் பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். அவர்களை நினைத்துப் பார்த்து பணியாற்ற வேண்டும். ஏற்கெனவே நாம் கண்ட தோல்விகள் எல்லாம் மறந்துவிட்டது என்கிற ரீதியில் அடுத்தகட்ட வெற்றிகளை நோக்கி பயணிக்கிற மனநிலையில் தொண்டர்கள் உள்ளதை உணர முடிகிறது.

ஓய்வின்றி உழைப்பேன்

சிறு பிரச்சினைகளை விடுத்து, நான், நீ என்ற முனைப்புகளை விடுத்து கட்சிப் பணியாற்ற சபதமேற்போம். திருக்குவளையில் சிறுவனாக எப்படி உத்வேகத்துடன் செயல்பட்டேனா அதேபோல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் திமுகவை கட்டிகாத்து வருகிறேன். திமுகவுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன். ஓய்வு என்பதை ஒரு போதும் நினைக்காமல் உழைப்பேன். எனக்கு பிறகு திமுக என்ன ஆகும் என்று இங்கு பேசினார்கள். யாரும் அஞ்ச வேண்டாம். நான் இல்லாதபோதும், திமுகவை யாரும் அசைக்க முடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டே நான் கண்களை மூடுவேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விருதுகள் வழங்கினார்

இந்த நிகழ்ச்சியின்போது பேராசிரியர் அய்யாசாமிக்கு பெரியார் விருதும், அண்ணா விருது விஜயா தாயன்பனுக்கும், பாவேந்தர் விருது திண்டுக்கல் ஐ.லியோனிக்கும், கலைஞர் விருது தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமிக்கும் கருணாநிதி வழங்கினார். பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x