

கோவை ரியல் எஸ்டேட் அதிபர் மணிவேல் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, வழக்கறிஞர் ராஜவேல் - மோகனா தம்பதியை காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் போலீசார் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மணிவேல், சாய்பாபாகாலனியை சேர்ந்த அம்மாசை கொலை வழக்குகளில் வழக்கறிஞர் ராஜவேல் - மோகனா தம்பதியினர் முக்கிய எதிரிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்திற்கு தப்பிச் சென்ற இவர்களை, தனிப்படை காவல்துறையினர் அண்மையில் பிடித்தனர். அம்மாசை கொலை வழக்கில், இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ரத்தினபுரி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
தற்போது, கோவை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ள இவர்களை, மணிவேல் கொலை வழக்கு தொடர்பாக காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் போலீசார் முடிவெடுத்துள்ளனர். இது தொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன், திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர்.
அம்மாசை கொலை, நஞ்சுண்டாபுரம் பெண் மாயமான வழக்கு போன்றவற்றிலும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகத் தெரிகிறது. அம்மாசை கொலை வழக்கில், போலி ஆவணங்கள் தயாரித்தல், மோசடி, ஏமாற்றும் நோக்கில் போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.