Published : 15 Mar 2016 02:00 PM
Last Updated : 15 Mar 2016 02:00 PM

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவேன்: அன்புமணி புது கோஷம்

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவேன் என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

மதுரை பை-பாஸ் சாலையில் பாமக சார்பில் ஊழல் எதிர்ப்புக் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:

பாமக ஆட்சிக்கு வந்தால் ஒளிவுமறைவில்லாத நேர்மையான நிர்வாகம் நடக்கும். அதிமுகவைப் போல ஒரே நபரிடம் அதிகாரம் குவிந்து இருக்காது. அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செயல்படவே இல்லை. இது தவறான முன் உதாரணம். தற்போது தமிழகத்தில் உள்ளாட்சிகள் அதிகாரமே இல்லாமல் உள்ளன. பாமக ஆட்சியில் 50 சதவீதம் அதிகாரம் உள்ளாட்சிகளுக்கு வழங்கப்படும். பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு மாவட்டத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படும். இதன்மூலம், ஒவ்வொரு ஒன்றியத்திலும் மக்களைத் தேடி முதலமைச்சர், அமைச்சர்கள் வருவார்கள். காணொளி கலாச்சாரத்துக்கு முடிவு கட்டப்படும்.

5 ஆண்டுகளில் சட்டப்பேரவை 150 முறையே கூடியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசியல் சாசனத்தில் மிகப் பெரிய பொறுப்புள்ளது. ஆனால், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஒரே ஒருமுறை மட்டும் சட்டப்பேரவைக்கு வந்து சண்டை போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ரூ. 300 கோடி செலவு செய்த தமிழக அரசுக்கு சட்டப் பேரவைக் கூட்டத்தில் நடைபெறும் விவாதத்தை டி.வி.யில் ஒளிபரப்ப ரூ.20 கோடி இல்லையாம்.

ஊழலைத் தடுக்க பொதுமக்களுக்கு 108 ஆம்புலன்ஸ் அழைப்பைப் போல பொதுவான அழைப்பு எண் வழங்கப்படும். அதில் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் புகார் செய்யலாம். இந்தத் துறை முதலமைச்சர் அலுவலகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இருக்கும். பாமக வெற்றி பெற்றால் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம். முதலமைச்சர், அமைச்சர்கள் சொத்து விவரம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் அரசு இணையதளத்தில் வெளியிடப்படும். திட்டங்களை நிறைவேற்றும் முன் எதிர்க்கட்சிகள், பொதுமக்களிடம் கருத்துகளை கேட்போம். காவல்துறையினர் சுதந்திரமாகச் செயல்பட காவல்துறை ஆணையம் உருவாக்கப்படும்.

தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை எதிரி கட்சிகளாக பார்ப்பதால் மீத்தேன் திட்டம், கெயில் எரிவாயுத் திட்டம், காவிரிப் பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினைகளில் நிரந்தரத் தீர்வு கிடைக்காமல் உள்ளது.

தமிழகத்தில் ஒரு சாலையை அமைத்தால் மூன்று மாதம் கூட தாக்குப்பிடிக்காது. சிங்கப்பூரில் ஒரு சாலையை அமைத்தால் 10 ஆண்டுகள் வரை தரமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அந்த சாலையை அமைத்த ஒப்பந்ததாரருக்கு சிறைதான் கிடைக்கும். தமிழகத்தில் அப்படியொரு சட்டத்தைக் கொண்டு வருவேன். சிறப்பாகச் செயல்படும் அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x