Published : 29 Jul 2016 10:26 AM
Last Updated : 29 Jul 2016 10:26 AM

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு 7 சிறப்பு கவுன்ட்டர்கள் திறப்பு: 31-ம் தேதி வரை செயல்படும் என அறிவிப்பு

ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் பெறும் சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்காக வருமான வரி தலைமை அலுவலகத்தில் 7 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த அலுவலகம் வரும் 31-ம் தேதி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி தலைமை அலுவலகத்தில் ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் பெறும் சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்க ளது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்காக 7 சிறப்புக் கவுன்ட்டர்களை வருமான வரித் துறை முதன்மை ஆணையர் ஏ.கே.வத்சா நேற்று திறந்து வைத்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறும்போது, “2016-17-ம் நிதியாண்டுக்கான வருமான வரி இலக்கு ரூ.59 ஆயிரத்து 243 கோடி யாகும். 2015-16-ம் நிதியாண்டுக்கு வருமான வரி இலக்கு ரூ.51 ஆயிரத்து 329 கோடியாக நிர்ணயிக் கப்பட்டது. ஆனால், இலக்கைத் தாண்டி ரூ.51 ஆயிரத்து 497 கோடி வருமான வரி வசூலிக்கப்பட்டது” என்றார்.

வருமான வரித் துறை ஆணை யர் (நிர்வாகம் மற்றும் வரி செலுத்து வோர் சேவை) பழனிவேல்ராஜன் கூறியதாவது:-

2015-16-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்காக திறக்கப்பட்டுள்ள சிறப்பு கவுன்ட்டர்கள் வரும் 31-ம் தேதி வரை நான்கு நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். வரும் ஞாயிற் றுக்கிழமை தேவைப்பட்டால் எங்கள் துறையின் ஊழியர்கள் கூடுதல் நேரம் (இரவு 7.30 மணி வரை) பணிபுரிந்து வருமான வரி செலுத்துவோருக்கு உதவுவார்கள்.

இந்த முகாமில், ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை உள்ளவர்கள் மட்டும் தங்களது வருமான வரிக் கணக்கை உரிய படிவம் மூலம் தாக்கல் செய்யலாம். இப்பணியில், வருமான வரித் துறையின் 50 அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மின் ஆளுமைத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள வர்கள் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம்.

ஆன்-லைன் மூலம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, படிவம் மூலம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. அதனால்தான் ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் பெறுவோருக்காக மட்டும் சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) அவசியம். அதனால் நிரந்தர கணக்கு எண்ணைச் சரிபார்க்க தனி கவுன்ட்டர் உள்ளது. முதியோருக்காகவும் தனி கவுன்ட்டர் இருக்கிறது.

வருமான வரிச் சட்டத்தின் 139 (1)-ன்படி ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு வரி செலுத்தினால், தாமதமாக செலுத்துவதற்காக வட்டி செலுத்த நேரிடும் என்றார் பழனிவேல் ராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x