Published : 07 Apr 2017 01:14 PM
Last Updated : 07 Apr 2017 01:14 PM

வருமானவரிச் சோதனைக்குள்ளான அமைச்சர் அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

ஓட்டுக்குப் பணம் தருவதற்காக ஊழல் செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவிநீக்கம் செய்யவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரிச் சோதனை நடத்தப்படுகிறது.

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. அம்மா பிரிவு வேட்பாளர் தினகரனுக்கு ஆதரவாக வாக்குகளை விலைக்கு வாங்கும் நோக்குடன் ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.4,000 வீதம் மொத்தம் ரூ.100 கோடி பணம் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பணத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வசூலித்துக் கொடுத்ததாகவும், அதுமட்டுமின்றி அவர் நடத்தும் கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான வருமான வரிக்கணக்கு முறையாகக் காட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இவற்றின் தொடர்ச்சியாகவே அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

அமைச்சர் விஜயபாஸ்கரின் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் ரூ.1.80 லட்சமும், அவரது உதவியாளர் நயினார் என்பவருக்குச் சொந்தமான திருவல்லிக்கேணி வீட்டில் ரூ.2.2 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் 5 அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களின் அறைகளிலும், முன்னாள் மக்களவை உறுப்பினர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரனின் இல்லத்திலும் நடத்தப்பட்ட ஆய்விலும் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுக்குத் தருவதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மருந்து நிறுவனங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து பல நூறு கோடியை கையூட்டாகப் பெற்றிருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்துதான் இச்சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோரின் வீடுகளில் நடத்தப்படும் சோதனைகள் இதை உறுதி செய்துள்ளன.

தமிழ்நாட்டில் பதவியில் உள்ள அமைச்சரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது அண்மைக்காலத்தில் இதுவே முதல்முறையாகும்.

மணல் கொள்ளை உள்ளிட்ட அனைத்து மோசடிகளிலும் சம்பந்தப்பட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ் மீது குற்றச்சாட்டுகள் இருந்தபோது, சென்னை தலைமைச் செயலகத்தில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டது.

இப்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதி, பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லம் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இவை தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகம் என்றாலே ஊழல் மாநிலம் என்ற அவப்பெயர் மீண்டும் ஒருமுறை ஏற்பட்டிருக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் மீது அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்வரவில்லை. தமிழக அரசு ஊழலை ஊக்குவிப்பதற்கு இதுவே உதாரணமாகும்.

தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் தருவதுதான் அனைத்து ஊழல்களுக்கும் அடிப்படை என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காகவே கூடுதலாக ஊழல் செய்யும் அவலம் இப்போது நடைபெற்றிருக்கிறது. தமிழகத்தில் ஊழல் எந்த அளவுக்கு பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதற்கு இது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

ஓட்டுக்கு பணம் தருவதைத் தடுக்கவும், ஒரு தொகுதியில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்பட்டால் அத்தொகுதியின் இடைத்தேர்தலை உடனடியாக நிறுத்தி வைக்கவும், பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யவும் வசதியாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டியது எவ்வளவு அவசியம் என்பதையும் அமைச்சர் வீட்டில் நடத்தப்படும் வருமான வரிச் சோதனை உணர்த்துகிறது.

ஓட்டுக்குப் பணம் தருவதற்காக ஊழல் செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருக்கு துணை நின்ற சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோரை உடனடியாக பதவிநீக்கம் செய்யவேண்டும். இதுதொடர்பாக இவர்கள் மூவர் மீதும், இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x