Published : 09 May 2016 03:55 PM
Last Updated : 09 May 2016 03:55 PM

நான் ஹீரோ, கருணாநிதி, ஜெயலலிதா..?- ஆங்கில சேனலுக்கு விஜயகாந்த் பேட்டி

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் என்.டி.டி.வி. ஆங்கில தொலைக்காட்சிக்காக மூத்த பத்திரிகையாளர்களுக்கு தேமுதிக தலைவரும் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் பேட்டியளித்தார். | வீடியோ இணைப்பு கீழே

அந்தப் பேட்டியின் விவரம்:

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்.. இதுதான் இதுவரை நீங்கள் பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறீர்கள். இப்போது தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ள இந்த பொறுப்புதான் மிகப் பெரியது எனக் கருதுகிறீர்களா?

நான் ஹீரோ. கருணாநிதி எனக்கு வில்லன். ஜெயலலிதா எனக்கு வில்லி. 93 வயதான கருணாநிதியுடனும், 65 வயது மதிக்கத்தக்க ஜெயலலிதாவுடனும் போட்டி போடுகிறேன். என் வயது என்னவென்பது எனக்கே தெரியாது. அதை நீங்கள் 70, 80 எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், என் மனது எப்போது இளமையானது.

திமுகவும், அதிமுகவும் உங்கள் கூட்டணியை விரும்பியபோதும் நீங்கள் ஏன் அவர்களுடன் கூட்டணி அமைக்கவில்லை?

முதலில் நான் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தேன். மூன்றே மாதத்தில் அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறினேன். பால் விலை, பஸ் கட்டண விலையை அதிமுக அரசு ஏற்றியது. அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனாலும் அவர்கள் விலையேற்றத்தை வாபஸ் பெறவில்லை. அதனால் கூட்டணியில் இருந்து வெளியேறினேன். இப்போது, தேர்தல் வாக்குறுதியில் பால் விலையை குறைப்பதாக சொல்கிறார்கள். இதைத்தான் நான் அன்று வலியுறுத்தினேன். அன்றைக்கு செய்யவில்லை. இன்றைக்கு செய்கிறார்கள். ஏன் தெரியுமா? தேர்தல் பயம்.

ஜெயலலிதா, கருணாநிதியை நேருக்கு நேர் சந்தித்தால்?

ஜெயலலிதா என்னைப் பார்த்தால் முகத்தை திருப்பிக் கொள்வார். நானும் அவ்வாறே செய்வேன். ஆனால், கருணாநிதி பேசுவார். மரியாதைக்கு நானும் பேசுவேன். அவரது அரசியல் நாகரிகம் அது. மேலும், கருணாநிதி எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்வார்.

ம.ந.கூட்டணியில் நீங்கள் மட்டுமே பலமானவராகத் தெரிகிறீர்கள்.. ஒருவேளை உங்கள் ஆட்சி அமைந்தால் எப்படி அரசாங்கத்தை கட்டமைப்பீர்கள்?

அரசாங்கம் அமைக்க நல்ல எண்ணங்கள் இருந்தால்போதும். ஜெயலலிதாவுக்கு எதுவுமே தெரியாது. அதிகாரிகள் திட்டம் வகுத்துத் தர அரசாங்கம் நடத்துகிறார். எனவே, அரசாங்கம் அமைக்க முன் அனுபவம் வேண்டும் என்று கூறுவதெல்லாம் பிதற்றல். எங்கள் தேர்தல் அறிக்கையை திமுக, அதிமுக காப்பியடித்திருக்கிறது. எங்கள் தேர்தல் அறிக்கை வெற்றிக்கான சாத்தியங்களை கொண்டுள்ளதால் பயத்தின் காரணமாக ஜெயலலிதா இலவச அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

தேர்தலில் எத்தனை சீட் வெற்றி பெறுபோம் என்று துல்லியமாக கணித்துச் சொல்ல நான் ஜோதிடன் அல்ல. ஆனால், நிச்சயமாக எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

நீங்கள் அதிகம் குடிப்பதாக நிலவும் குற்றச்சாட்டு குறித்து..

இல்லையே. அது பழைய குற்றச்சாட்டு. இப்போது நான் குடிப்பதில்லை. நான் குடிகாரன் என விமர்சிப்பவர்கள் என்னை மருத்துவ பரிசோதனை செய்து பார்க்கலாம் என நான் பல முறை கூறிவிட்டேன். பொதுக்கூட்டங்களில் மக்கள் முன்னிலையில்கூட இதைக் கூறிவிட்டேன். இப்போது என் மீது குடிகாரன் என்ற குற்றச்சாட்டை யாரும் முன்வைப்பதில்லை.

வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்குவீர்கள்?

வீடுதோறும் ரேஷன் பொருட்கள் நேரடியாக விநியோகிக்கப்படும் என எங்கள் தேர்தல் வாக்குறுதியில் இருக்கிறது. அதன் மூலமும் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். நூறு நாள் வேலைத் திட்டம் மூலம் பெறப்படும் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்வேன்.

ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கும் பழக்கம் குறித்து உங்கள் கருத்து?

ஒரு பெண்ணின் காலில் ஆண் விழுந்து வணங்குவது தமிழ்நாட்டை தலை நிமிரச் செய்யுமா? தமிழ்நாடு தலை நிமிர வேண்டுமானால், முதலில் தமிழக அமைச்சர்கள் தலை நிமிர வேண்டும். மற்றவர்கள் தன் காலில் விழுந்து வணங்குவதை ஜெயலலிதா ரசிக்கிறார். இதுவரை எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இப்போது தேர்தல் பிரச்சார மேடைகளில் இவர் உயரத்தில் அமர்ந்துகொண்டு வேட்பாளர்களை கீழே அமர வைக்கிறார். ஆனால், நான் என் வேட்பாளர்களை சரி சமமாக நடத்துகிறேன்.