

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மத்திய நிதிநிலை அறிக்கையில் சர்க்கரை மானியத்துக்கு வெறும் ரூ. 200 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகளுக்கு வழங்கும் சர்க்கரை மானியத்தை மத்திய அரசு நிறுத்திவிடும் என வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த திமுக ஆட்சியில் இந்தியாவி லேயே பொதுவிநியோகத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றது. அதனை சீர்குலைக்கும் வகையில் இந்த மானிய ரத்து அமைந்து விடக்கூடாது.
இப்போது சர்க்கரையில் ஆரம்பிக் கும் இந்த மானிய ரத்து அரிசி, மண் ணெண்ணெய் என அனைத்துக்கும் தொடரும் ஆபத்து உள்ளது. இப்போதே ரேஷனில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கு வதில் அரசு தாமதம் செய்து வருகிறது.
தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் 35 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ சர்க்கரைக்கு மத்திய அரசு 18 ரூபாய் 50 பைசா மானியம் வழங்குகிறது. இந்த மானியத் தொகையை ரத்து செய்ய மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என செய்திகள் வந்துள்ளன.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கையெழுத்திட்ட மாநிலங்களுக்கு சர்க்கரை மானியம் ரத்து செய்யப் படும் என செய்திகள் வருகின்றன. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கையெ ழுத்திட்டதால் தான் தமிழகத்துக்கு இந்த ஆபத்து வந்துள்ளதாக அஞ்சுகிறேன்.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கையெழுத்திட்டது குறித்து ஆளுநர் உரையில் விவரித்துள்ள அரசு, சர்க்கரை மானிய இழப்பு குறித்து பேரவைக்கு தெரிவிக்காமல் இருந்தது வேதனையை அளிக்கிறது.
உதய் மின் திட்டம், ஜிஎஸ்டி வரி என என்னென்ன விஷயங்களில் தமிழகத்தின் நலன்களை, உரிமைகளை அதிமுக அரசு தாரை வார்த்துள்ளது என்பது குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கையெழுத்திட்ட ஒரே காரணத்துக்காக தமிழகத்தை தண்டிக்கும் போக்கை கைவிட்டு இதுவரை வழங்கி வந்த சர்க்கரை மானியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.