ஆசிய வசந்தத்துக்கு அச்சாரமா?

ஆசிய வசந்தத்துக்கு அச்சாரமா?
Updated on
1 min read

உலகில் ஜனநாயகம் நான்கு அடிகள் மேலே ஏறும்போது, நாற்பது அடிகள் அதைக் கீழே இறக்கும் வகையில், மனித உரிமைகளை நசுக்கும் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது மலேசிய அரசு. மலேசியாவில் இனி, அரசு சந்தேகிக்கும் எவர் ஒருவரையும் கைதுசெய்யலாம்; இப்படிக் கைதுசெய்யப்படுகிறவர் எந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்படுகிறார் என்பதைக்கூட அரசு சொல்ல வேண்டியது இல்லை. எந்தவித விசாரணையும் இல்லாமல் இரண்டாண்டு காலம் சிறையில் வைத்திருக்க முடியும்; அதன் பிறகு காவலை நீட்டிக்கலாம் அல்லது விடுதலைசெய்து மீண்டும் கைதுசெய்யலாம். பிரதமர் நஜீப் ரஸாக் தலைமையிலான தேசிய முன்னணி அரசு, மலேசிய மக்களவையில் நிறைவேற்றியுள்ள 1959-ம் வருஷத்திய குற்றவியல் சட்டத்துக்கான திருத்தத் தீர்மானம் இவ்வளவு அடக்குமுறைகளுக்கும் அனுமதி தருகிறது. கடந்த 2011-ல், சந்தேகத்தின்பேரில் ஒருவரைக் கைதுசெய்து, விசாரணையின்றி எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் வைத்திருக்க அனுமதிக்கும் சட்டத்தை பிரதமர் நஜீப்தான் ரத்துசெய்தார். பொதுத் தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்க அதுவும் ஒரு காரணம். அதே நஜீப் இப்போது வேறு வடிவில் அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவருகிறார். "மிகக் கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்று அரசு சந்தேகிக்கும் நபர்களின் மீதே இச்சட்டம் பிரயோகிக்கப்படும்; அதுவும் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை உள்ளடக்கிய ஒரு குழுவின் கண்காணிப்பிலேயே நடக்கும்" என்று சொல்கிறது அரசு. மலேசியச் சட்டங்கள் ஏற்கெனவே மனித உரிமைகள் சார்ந்து குழப்பமானவை. அரசும் இந்த விஷயத்தில் தெளிவற்ற நிலையிலேயே இருக்கிறது. மலேசியச் சட்டங்கள் ஒருபக்கம், "நீதித் துறை சுதந்திரமானது" என்கின்றன; மறுபக்கம் "நீதித்துறையின் செயல்பாடு கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டது" என்கின்றன. அரசுக்கு எதிரான சதிகளில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே கடுமையான சட்டங்கள் மலேசியாவில் இருக்கின்றன. சந்தேகம் வந்தால், வீடுகளை உரிய ஆணை இன்றிச் சோதனையிடவும், பொருள்களைப் பறிமுதல்செய்யவும், கைதுசெய்யவும் சில சட்டங்கள் அனுமதி தருகின்றன. ஊழல் அல்லது பயங்கரவாதச் செயலில் ஈடுபடுகிறார் என்ற சந்தேகத்தின்பேரில் எவருடைய கடிதங்களையும் தொலைபேசி அழைப்புகளையும் மின்னஞ்சல்களையும் உளவு பார்க்க முடியும். இத்தகைய சூழலில் இப்போது கொண்டுவரப்படும் சட்டத்திருத்தம் அரசியல் எதிரிகளையும் சிறுபான்மை மக்களின் போராட்டங்களையும் முடக்கும் ஆயுதம் என்கிறார்கள் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள். மலேசிய அரசு தனக்கு வெளியே உள்ள உலகத்தைப் பார்க்க வேண்டும். முற்பகுதியில் ஜனநாயகம் முடக்கப்படும் இடங்களே பிற்பகுதியில் சுதந்திர கோஷம் முழங்கும் இடங்களாக மாறுகின்றன என்கிறது வரலாறு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in