Published : 16 Jun 2016 12:55 PM
Last Updated : 16 Jun 2016 12:55 PM

உடுமலை அருகே துங்காவி கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: ஆடு, மாடு குடிக்கும் நீரையே அருந்தும் அவலம்

உடுமலை அருகே சாலையோரக் குழாயில் இருந்து கசிந்து தேங்கும் நீரை ஆடு, மாடுகள் குடித்து வருகின்றன. குடிநீர் பற்றாக்குறையால் அதே நீரை அப்பகுதி மக்களும் பருகி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், துங்காவி கிராமத்தில் சுமார் 3,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். அதே கிராமத்திலும், பூளவாடி செல்லும் சாலையில் உள்ள புதுக்காலனியிலும் வசிப்போர், பொதுக்குழாயில் மட்டுமே குடிநீர் பிடித்து வருகின்றனர்.

புதுக்காலனியில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. அங்கு போதிய பொதுக்குழாய் இணைப்புகள் இல்லை. அவ்வழியாக பூமிக்கடியில் குழாய் பதிக்கப்பட்டு, அடுத்த கிராமத்துக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

காலனிக்கு எதிராக சாலையோரத்தில் குடிநீர் குழாயில் இருந்து கசியும் நீர் குளமாக தேங்கியுள்ளது. அதனை ஆடு மற்றும் மாடுகள் குடித்து தாகத்தை தீர்த்துக் கொள்கின்றன. குடிநீர் பற்றாக்குறையால் வேறு வழியின்றி அதே நீரைத்தான் குடிக்க பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நவநீதராஜா கூறும்போது, ‘மின் தடைக் காலங்களில் குடிநீர் விநியோகத்துக்காக ரூ.14 லட்சம் செலவில் ஜெனரேட்டர் பொருத்தப் பட்டுள்ளது. ஆனால், அதற்கு டீசல் வாங்க பணமில்லையென்று கூறி ஜெனரேட்டர் பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஊராட்சி அலுவலக மின் கட்டணம் செலுத்தப்படாமல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அருகில் உள்ள ஒரு வீட்டில் இருந்து எடுத்து பயன்படுத்தப்படுகிறது. பல மாதங்களாக நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை’ என்றார்.

வரி நிலுவை

ஊராட்சியின் செயலர் இளங்கோவனிடம் கேட்டபோது, ‘துங்காவியில் நிலவும் குடிநீர் பிரச்சினை ஒன்றியத் தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் தெரிந்ததே. உடையார்பாளையத்தில் இருந்து 5 கி.மீ. கடந்து வரும் குடிநீர் போதிய அளவு கிடைப்பதில்லை. பெரிய ஊராட்சியாக இருந்தும் குறைந்த வருவாயை கொண்டுள்ளது. பொதுப்பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே வீட்டு இணைப்புகள் உள்ளன. ரூ.50,000-த்துக்கு மேல் வரும் மாதாந்திர மின் கட்டணைத்தைக் கூட ஊராட்சியால் செலுத்த முடிவதில்லை. ஊராட்சியில் உள்ள வசதிமிக்கவர்கள் பலரும் தங்களது வீட்டு வரி, குடிநீர் வரியை முறையாக செலுத்தாததால் பல லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது’ என்றார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணிடம் கேட்டபோது, ‘குடிநீர் வடிகால் வாரியம் வழங்கும் நீரை பிரித்து வழங்கும் நடவடிக்கைகளை மட்டுமே நாங்கள் மேற்கொள்கிறோம். பல மாதங்களாகவே இப்பிரச்சினை உள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் உட்பட துறையின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், உயர் அதிகாரிகள் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x