Published : 08 Oct 2014 04:40 PM
Last Updated : 08 Oct 2014 04:40 PM

அரசியல் சட்டப்பிரிவு 355-ஐ பயன்படுத்தி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்செய்ய வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் அரசியல் சாசன சட்டப் பிரிவு 355ஐ பயன்படுத்தி, சட்டம்-ஒழுங்கை சீர் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராகக் கூடாது. இதற்கு திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை யும், நீதிபதியையும் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். குறிப்பாக, தீர்ப்பை அதிக அளவில் விமர்சித்து வரும் அமைச்சர்கள் வளர்மதி, சம்பத் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாள்தோறும் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. வியாபாரிகளை வலுக்கட்டாயமாக கடைகளை அடைக்கச் சொல்கின்றனர். இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை சமாளிக்க அதிமுகவினரிடம் இருந்து ரூபாய் ஆயிரம் கோடியை இழப்பீட்டுத் தொகையாக வசூலிக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை.கல்வித்துறை முதல் சினிமாத் துறையினர் வரை அனைவரும் மிரட்டப்படுகின்றனர். உள்நாட்டில் அமைதியின்மை மற்றும் அண்டைநாடுகளின் ஆக்கிரமிப்பு ஏற்படும் சமயங்களில் மத்திய அரசு, அரசியல் சாசன சட்டப் பிரிவு 355ஐ பயன்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர் செய்யும். அதேபோல், தமிழகத்தில் சிறிது நாட்களுக்கு அரசியல் சாசன சட்டப் பிரிவு 355ஐ பயன்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேசமயத்தில், அரசியல் சாசன சட்டப் பிரிவு 356ஐ பயன்படுத்தி அரசை கலைப்பது என்பதில் எங்கள் கட்சிக்கு உடன்பாடு கிடையாது.

ஜெயலலிதா தன் மீதான வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்தார். 185 முறை வாய்தா வாங்கினார். ஆனால், பிணையைப் பெறுவதில் மட்டும் உடனடியாக வழங்க வேண்டும் எனக் கூறுகிறார்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவி இழப்பவர்கள், தண்டனைக் காலத்தில் வாக்களிக்கும் உரிமையை இழக்க வேண்டும். அத்துடன், கட்சி உறுப்பினர் தகுதியை ரத்து செய்வதோடு, தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும். இதன் மூலம், நிழல் முதல்வராக ஜெயலலிதா செயல்படுவது தடுக்கப்படும்.

இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

கேள்வி: ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்த திமுக, தீர்ப்பு வெளியான பிறகு மவுனம் சாதிப்பது ஏன்?

பதில்: அதற்கான காரணம் எனக்கும் தெரியவில்லை. புதிராகவே உள்ளது

கேள்வி: ஜெயலலிதா மீதான வழக்கு தமிழகத்தில் நடந்திருந்தால், இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்குமா?

பதில்: தமிழகத்தில் கர்நாடகத்தை விட திறமையான நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளனர். எனவே, இதுபோன்ற தீர்ப்பு இங்கும் கிடைத்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x