

சாலை விபத்தில் இறந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு ரூ.55 லட்சம் இழப்பீடு வழங்க லோக்-அதாலத்தில் உத்தரவிடப்பட்டது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் குஞ்சே சூர்யநாராயணா. இவரது மகன் பிரசன்னபாபு (28). இன்னும் திருமணமாகவில்லை. பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த பிரசன்னபாபு, கடந்த 2013-ல் அங்குள்ள நீர்வீழ்ச்சிக்கு தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், பிரசன்னபாபு உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து தனது மகனின் மரணத்திற்கு இழப்பீடு கோரி பிரசன்னபாபுவின் தந்தை சூரியநாராயணா, தாயார் அமராவதி மற்றும் சகோதரி அருணா ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று நடந்த லோக்-அதாலத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரிக்கப்பட்டது. இருதரப்பையும் விசாரித்த நீதிபதிகள், இறுதியாக விபத்தில் இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 55 லட்சத்தை ராயல் சுந்தரம் காப்பீட்டு நிறுவனம் 6 வாரத்திற்குள் வழங்க உத்தரவிட்டனர்.