Published : 28 Mar 2014 12:00 AM
Last Updated : 28 Mar 2014 12:00 AM

அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் செயினை பறித்து விழுங்கிய திருடன்: எண்டோஸ்கோபி மூலம் வெளியே எடுத்தனர்

சென்னை அரசு மருத்துவமனையில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் செயினை பறித்த திருடன், அதை வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.

ஸ்கேன் மூலம் குடலுக்குள் இருந்த செயினை கண்டுபிடித்து வாயில் எண்டோஸ்கோபி குழாய் விட்டு செயினை வெளியே எடுத்தனர் மருத்துவர்கள்.

சென்னை பரங்கிமலை நாசரேத்புரத்தை சேர்ந்தவர் கொண்டையா (70). உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு துணையாக மகள் தனலட்சுமியும் மருத்துவ மனையிலேயே இருந்தார். புதன் கிழமை இரவில் அறைக்கு வெளியே தனலட்சுமி படுத்திருந்த போது, நள்ளிரவு 1.30 மணி யளவில் ஓர் இளைஞர் அவர் அணிந்திருந்த 3 சவரன் செயினை பிடித்து இழுத்தார்.

சுதாரித்துக் கொண்ட தனலட்சுமி செயினை பிடிக்க, செயின் அறுந்து பாதி திருடன் கையிலும், மீதி தனலட்சுமி கையிலும் சிக்கியது. கிடைத்தது போதும் என்று திருடன் ஓட, தனலட்சுமி கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்களும், காவலுக்கு இருந்த உதவி ஆய்வாளர்கள் ஆம்புரோஸ், பாலசுப்பிரமணியம் ஆகியோரும் திருடனை விரட் டினர்.

சில மீட்டர் தூரத்திலேயே பிடிபட்ட திருடன், 'நான் திருட வில்லை, எனக்கு எதுவும் தெரியாது, நீங்கள் விரட்டியதால் ஓடினேன்' என்று கதைவிட, உதவி ஆய்வாளர்கள் 2 அடிவிட்டனர். உடனே ஓர் இடத்தை காட்டி, அங்கே தூக்கி வீசிவிட்டேன் என்று கூற, அங்கு பலமுறை தேடியும் செயின் கிடைக்கவில்லை.

ஒரு நோயாளியின் உறவினர், 'அவன் செயினை வாயில் போட்டதை பார்த்தேன்' என்று கூற, திருடனை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர். அவர்கள் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்க்க உள்ளே செயின் இருந்தது தெரிந்தது.

திருடனுக்கு இனிமா கொடுத்து செயினை வெளியே கொண்டுவரும் முயற்சி தோல்வி யடைந்ததால், மருத்துவர்கள் எண்டோஸ்கோபி குழாயை வாய் வழியாக விட்டு செயினை வெளியே எடுத்தனர்.

பிடிபட்டவரின் பெயர் கமலக்கண்ணன் (27). பல்லவன் சாலை அருகே உள்ள குடிசை வாரிய பகுதியைச் சேர்ந்தவர். திருடும் நோக்கத்துடன் தனது நண்பர் சையது உசேன் என்பவருடன் ஆட்டோவில் வந்திருக்கிறார் கமலக்கண்ணன்.

பார்க்கிங் பகுதியில் ஆட்டோவுடன் உசேன் தயாராக நிற்க, கமலக்கண்ணன் திருடிவிட்டு வந்ததும் ஆட்டோவில் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளனர். கமலக்கண்ணன் கொடுத்த தகவலின் பேரில் சையது உசேனும் கைது செய்யப்பட்டார்.

அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் ஸ்கேன் எடுக்க வந்த ஓர் இளைஞரிடம் செயினை பறித்துச் சென்றுவிட் டனர். இதேபோல பல திருட்டு சம்பவங்கள் அரசு மருத்துவ மனையில் தினமும் நடக்கின்றன.

அதை தடுப்பதற்கான வழிகள் மட்டும் காவல் துறையாலும், மருத்துவமனை நிர்வாகத்தாலும் இன்னும் எடுக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x