

மவுலிவாக்கத்தில் நடந்த 11 மாடி கட்டிட விபத்து தொடர்பான வழக்கில் அவசரமாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது ஏன் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானதில் அங்கு பணிபுரிந்த 61 பேர் பலியாயி னர். 27 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தர விடக் கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. இருதரப்பு வாதங் களை கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
இந்த வழக்கில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனு மற்றும் தமிழ்நாடு அரசின் நிலை குறித்த அறிக்கையை படித்துப் பார்த்தோம்.
இச்சம்பவம் தொடர்பாக நீதிபதி (ரகுபதி) கமிஷன் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படவில்லை. அதே நேரத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றப் பத்திரிகை சம்பந்தப் பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டுள்ளது.
விசாரணை கமிஷன் அறிக்கை யில், அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கலாம் அல்லது குற்றம் சாட்டப்படாமல் கூட இருக்கலாம். இந்த நிலை யில், இவ்வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், இச்சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை நடத்தப்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கட்டிட வடிவமைப்பாளரை இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவராக சேர்த்திருக்கும் போது, அந்த கட்டிட வடிவமைப் புக்கு அனுமதி அளித்த அதிகாரி களையும் குற்றப்பத்திரிகையில் சேர்க்க வேண்டும் என ஏன் நினைக்கவில்லை.
கட்டிட கட்டுமானத்துக்கான கட்டுப்பாட்டு விதிகளில் சிலவற்றைத் தளர்த்தி, மவுலி வாக்கம் கட்டிடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்தக் காரணத்துக்காக விதிகள் தளர்த் தப்பட்டன என்று தெரியவில்லை.
இதுகுறித்த விவரங்கள் அரசு ஆவணங்களில்தான் இருக்கும். எனவே, அந்த ஆவணங்களை நாங்கள் பார்க்க வேண்டும். அதுதொடர்பாக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் நீதிபதி விசாரணை கமிஷன் அறிக்கை, எங்களுக்கு கிடைத்த பிறகுதான் இந்த வழக்கில் சரியான உத்தரவு பிறப்பிக்க முடியும்.
இதற்கு 6 வார காலஅவகாசம் வேண்டும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் கேட்டுக் கொண்டுள்ளார். வழக்கு விசாரணை டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.