

போக்குவரத்து தொழிலாளர் நல ஆணையர் யாஸ்மின் பேகம் முத்தரப்பு பேச்சுவார்த்தையை சென்னை டி.எம்எஸ் வளாகத்தில் நடத்திவருகிறார். இதையடுத்து, வேலைநிறுத்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மே 15-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் 1.43 லட்சம் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. ஏற்கெனவே போடப்பட்ட 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. 13-வது புதிய ஊதிய ஒப்பந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த மார்ச் 7-ம் தேதி குரோம்பேட்டை பணிமனையில் நடந்தது.
இதில், பங்கேற்க தொழிற்சங்க நிர்வாகிகள் புதிய ஊதிய ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தங்களில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், நஷ்டத்தில் இருந்து மீட்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
தொ.மு.ச. பேரவை, சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி.,எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., டி.எம்.டி.எஸ்.பி.,பி.டி.எஸ்., எம்.எல்.எப்.,ஏ.ஏ.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.