

நீலகிரி மாவட்டம் முதுமலையில் நிலவி வரும் வறட்சியால் விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்று யானைகள் முதுமலையில் இறந்தன. மசினகுடி, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் சிறிதளவு பசுமை திரும்பியது. இந்நிலையில், நேற்று முதுமலை தெப்பக்காடு சரகத்துக்கு உட்பட்ட ஒன்னரட்டி பகுதியில் பெண் யானை உயிரிழந்தது கண்டறியப்பட்டது. சுமார் 30 வயதுடைய பெண் யானை புலி தாக்கி இறந்திருக்கலாம் என யானையை ஆய்வு செய்த சரகர் ஆரோக்கியசாமி கூறினார்.
இந்த யானைக்கு இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட சேரம்பாடி சரகம் கண்ணம்பள்ளி பகுதியில் கவலைக்கிடமான நிலையில் ஒரு யானை கண்டறியப்பட்டு உள்ளது. இந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.