Last Updated : 17 Jul, 2016 03:07 PM

 

Published : 17 Jul 2016 03:07 PM
Last Updated : 17 Jul 2016 03:07 PM

தொண்டி அருகே பாம்பாற்றின் கழிமுகப்பகுதியில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பள்ளி கண்டுபிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாம்பாற்றின் கழிமுகப்பகுதியில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பள்ளியை தொல்லியல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், திருப்புல்லாணி உள்ளிட்ட பல இடங்களில் சமண தீர்த்தங்கரர்கள் சிற்பங்கள் கிடைத்துள்ளன. மதுரை கீழவளவு குகைப்பகுதியில் உள்ள கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, தொண்டியைச் சேர்ந்த இலவோன் என்பவர் அங்கு கற்படுக்கை அமைத்துக் கொடுத்ததாகத் தெரிவிக்கிறது. இதன்மூலம் சமண மதத்தை பின்பற்றுவோர் சங்ககாலம் முதல் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இருந்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாம்பாற்றின் கழிமுகப்பகுதியில் இடையமடம் எனும் கிராமத்தில் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையத்தின் நிறுவனர் வே.இராஜகுரு, ஒருங்கிணைப்பாளர்கள் பரமசிவம், முத்துராமன், மிக்கேல்ராஜ், ராபர்ட் புரோமியர் ஆகியோர் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பள்ளியை கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை இடையமடத்தில் செய்தியாளர்களிடம் தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு கூறியதாவது,

பார்சுவநாதர் சிற்பம்

மூலஸ்தானம், முன்மண்டபம், மானஸ்தம்பம் என்ற அமைப்பில் இந்த இடையமடம் சமணப்பள்ளி அமைந்துள்ளது. மூலஸ்தானம் செவ்வகவடிவில் உள்ளது. முன்மண்டபத்தின் வலதுபுறம் உள்ள சுவரில் 27 செ.மீ. உயரமும் 17 செ.மீ. அகலமும் உடைய நின்ற கோலத்திலான பார்சுவநாதரின் புடைப்புச் சிற்பம் உள்ளது. அவர் தலைக்கு மேல் ஐந்துதலை நாகம் படமெடுத்த நிலையிலும், முதுகின் பின்புறம் அதன் உடல் சுருண்டும் உள்ளது போன்ற இச்சிற்பம் மதுரை கீழக்குயில்குடி பேச்சிப்பள்ளம் பகுதியில் உள்ள பார்சுவநாதர் சிற்பத்தை ஒத்துள்ளது. எனவே இப்பள்ளி கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்கலாம்.

இங்கு கல்லாலான சித்தசக்கரம் வெளிப்புறச் சுவரில் வைத்து கட்டப்பட்டுள்ளது. இதன் கருவறை விமானம் கோபுரம் ஏதுமின்றி தட்டையாக உள்ளது. சதுர வடிவ தூண்களில் தரங்க போதிகை அமைப்பு காணப்படுகிறது. இது பாண்டியர் காலக் கட்டடக்கலை அமைப்பில் உள்ளது.

மீன் சின்னங்கள்

முன்மண்டபத்தின் உள்புற சுவரில் எதிர் எதிரே அமைந்த நிலையில் பெரிய அளவிலான மீன்களின் இரு புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அதேபோல் மூலஸ்தானத்தின் உள்ளே சிறிய அளவில் மூன்றும், பெரிய அளவில் ஆறுமாக ஒன்பது மீன்கள் புடைப்புச் சிற்பமாகவும் கோட்டுருவமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மீன் சின்னங்களைக் கொண்டு, இப்பள்ளி சமணர்களின் பதினெட்டாம் தீர்த்தங்கரரான அரநாதருக்கு பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதலாம். அரநாதரின் வாகனம் மீன் என்பது குறிப்பிடத்தகுந்தது.

(பாதக்கோயில், உரலில் மருந்து இடிக்கும் ஒரு புடைப்புச் சிற்பம், மீன் சின்னங்கள், பார்சுவநாதர் சிற்பம்,கல்வெட்டு, வே. ராஜகுரு)

மருத்துவதானம்

சமணர்களின் நான்கு வகைத் தானங்களில் ஒன்று மருத்துவ தானம். முன்மண்டபத்தின் சுவரில் ஒருவர் உரலில் மருந்து இடிக்கும் ஒரு புடைப்புச் சிற்பம் உள்ளது. இப்பகுதியில் கொக்கிமுள் ஆதண்டை, சங்கஞ்செடி ஆகிய மூலிகைச் செடிகள் காணப்படுகின்றன. இதன்மூலம் சமணமுனிவர்கள் இங்கு மக்களுக்கு மருத்துவ சேவை செய்துள்ளனர் என அறிய முடிகிறது.

கல்வெட்டுகள்

இப்பள்ளியில் நான்கு துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. ஒரு கல்வெட்டு சிதைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள மூன்று கல்வெட்டுகள் மூலம் இது கி.பி. 1180 முதல் கி.பி 1190 வரை அரசாண்ட மாறவர்மன் விக்கிரமபாண்டியன் காலத்தியது எனத் தெரிகிறது.

பாதக்கோயில்

இப்பள்ளியிலிருந்து, ஐம்பது அடி தூரத்தில் பாதக்கோயில் உள்ளது. நான்கு தூண்களுக்கு நடுவே கல்லால் அமைக்கப்பட்ட ஒரு ஜோடி பாதம் உள்ளது. இதன் இரு தூண்களிலும் வணங்கிய நிலையிலுள்ள இருவரின் சிற்பம் உள்ளது. இவர்களின் தலைக்கு மேல் ஒருகுடை அமைப்பு உள்ளது. எனவே இது சமணர்களால் அமைக்கப்பட்ட பாதக்கோயில் என்பது உறுதியாகிறது.

கி.பி. பதினான்காம் நூற்றாண்டு வரை இடையமடம் சமணப் பள்ளியாக வழிபாட்டில் இருந்திருக்கவேண்டும். அதன்பின்பு இது சமணர்களால் கைவிடப்பட்டு இடிந்த நிலையில் இருந்ததை சேதுபதி மன்னர்கள் காலத்தில் அப்பகுதி மக்கள் புனரமைத்து மடமாகப் பயன்படுத்தி இருக்கலாம். கிழவன் சேதுபதி வழங்கிய ஒரு செப்பேட்டில் எல்லை குறிப்பிடும் போது இடையமடம் குறிப்பிடப்பட்டுள்ளது இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

சமணர்களால் அமைக்கப்பட்ட குகைப் பள்ளிகள் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் காணப்பட்டாலும் கட்டுமானப் பள்ளியாக தென் மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். எனவே இதை பழுது நீக்கி பாரம்பரியச் சின்னமாக பாதுகாக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x