Published : 23 Jul 2016 09:14 PM
Last Updated : 23 Jul 2016 09:14 PM

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு: ஹோட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க ஜி.ஆர்.வலியுறுத்தல்

சட்டத்தை மீறி மூன்று தொழிலாளர்களை கழிவுநீர் தொட்டிக்குள் இறக்கி சுத்தம் செய்ய பணித்த ஹோட்டல் நிர்வாகத்தினரை தமிழ்நாடு மேனுவல் ஸ்கேவஞ்சிங் சட்டத்தின்படி கைது செய்து உரிய தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' சென்னை, பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள சங்கீதா ஹோட்டலில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர்கள் மூன்று பேர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

உயிரிழப்பால் துயருற்றுள்ள மூன்று தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

உயிரிழந்துள்ள தொழிலாளர்கள் மூன்று பேரும் வெளிமாநிலங்களிலிருந்து வேலைக்காக இங்கு வந்து அதே ஹோட்டலில் தங்கி வேலை செய்து வந்திருக்கிறார்கள். மூன்று தொழிலாளர்களும் வழக்கமான பணியில் இருந்த போது, ஹோட்டல் நிர்வாகத்தின் நிர்ப்பந்தத்தின் காரணமாக கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்திருக்கின்றனர். இந்நிலையிலேயே விஷவாயு தாக்கி மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். அப்பாவித் தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு ஹோட்டல் நிர்வாகமே முழுப் பொறுப்பாகும்.

தொழிலாளர்கள் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்வதை தடுக்கும் சட்டம் 2013 ஆண்டு முதல் அமலில் உள்ளது. எனினும், சட்டத்தை தனியார் நிறுவனங்கள் மதிப்பதில்லை. இதனால் சென்னை உள்ளிட்டு தமிழகத்தின் பல இடங்களிலும் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியில் இறக்கிவிடப்பட்டு விஷ வாயு தாக்கி அப்பாவித் தொழிலாளர்கள் பலியாகும் நிலை தொடர்கிறது.

எனவே சட்டத்தை மீறி மூன்று தொழிலாளர்களை கழிவுநீர் தொட்டிக்குள் இறக்கி சுத்தம் செய்ய பணித்த ஹோட்டல் நிர்வாகத்தினரை தமிழ்நாடு மேனுவல் ஸ்கேவஞ்சிங் சட்டத்தின்படி கைது செய்து உரிய தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.

உயிரிழந்த மூன்று தொழிலாளர்களும் திருமணமாகாத இளம் தொழிலாளர்கள் என்பதை கருத்தில் கொண்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும்.

சட்டம் முறையாக அமலாவதை கண்காணிக்க தவறிய அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் தொடராமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுத்திட வெண்டும்'' என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x