Published : 01 Jan 2014 01:08 PM
Last Updated : 01 Jan 2014 01:08 PM

நம்மாழ்வார் உடல் அடக்கம்: இயற்கை ஆர்வலர்கள் பிரியாவிடை

கரூர் மாவட்டம் கடவூரில் நம்மாழ்வார் நிர்மாணித்த 'வானகம்' என்ற இயற்கை வேளாண்மை பயிற்சியளிக்கும் திறந்தவெளி பண்ணையில், அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, தஞ்சாவூர் பாரத் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் உடலுக்கு மாநிலம் முழுவதிலுமிருந்து வந்த ஆயிரக்கணக்கான இயற்கை ஆர்வலர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த நம்மாழ்வார் (75), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் பட்டம் பெற்று, கோவில்பட்டி அரசு வேளாண் ஆய்வு நிலையத்தில் பணிபுரிந்தபோது, அரசின் செயல்பாடுகளால் அதிலிருந்து வெளியேறி, தமிழகம் முழுவதும் இயற்கை வழி வேளாண்மை குறித்த விழிப்புணர்வை பரப்பும் பணியில் அர்ப்பணிப்போடு செயல்பட்டு வந்தவர்.

இந்த நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் தனியார் நிறுவனத்தால் நிலத்துக்கு அடியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக, பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் சார்பில் கடந்த ஒரு மாதமாக கிராமம் கிராமமாகச் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நம்மாழ்வார், காய்ச்சல் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை இரவு 9 மணியளவில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அத்திவெட்டி பிச்சினிக்காடு கிராமத்தில் காலமானார்.

அங்கிருந்து, இரவு 12 மணியளவில் தஞ்சை சுந்தரம் நகரில் உள்ள அவரது அண்ணனும் முன்னாள் எம்எல்ஏ-வுமான கோ. இளங்கோவனின் மகன் வீட்டுக்கு அவரது உடல் எடுத்து வரப்பட்டது.

பின்னர், செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதல் பொதுமக்கள் பார்வைக்காக தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாரத் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

நம்மாழ்வாரின் சகோதரர்கள் பொறியாளர் கோ.பால கிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ கோ. இளங்கோவன், மனைவி சாவித்ரி, மகள் மீனா உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள் உடனிருந்தனர். தமிழக அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், குடிசை மாற்று வாரியத் தலைவர் கு.தங்கமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று அதிகாலை தஞ்சையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட நம்மாழ்வாரின் உடல், அவரது விருப்பப்படி கரூர் மாவட்டம் கடவூரில் அவர் நிர்மாணித்த ‘வானகம்’ என்ற இயற்கை வேளாண்மை பயிற்சியளிக்கும் திறந்தவெளி பண்ணையில் காலை 10 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x