

மதுரை விமான நிலையத்தில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பன்னாட்டு விமான நிலையமாக முழு அளவில் தரம் உயர்த்தக் கோரி பிரதமருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தின் விபரம்:
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும், தென் தமிழ்நாட்டின் மையமாகவும் திகழ்கின்ற மதுரை மாநகரில் அமைந்து உள்ள விமான நிலையத்தில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பன்னாட்டு விமான நிலையமாக முழு அளவில் தரம் உயர்த்திடக் கோரி தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினர் தங்களுக்கு விடுத்து உள்ள கோரிக்கை விண்ணப்பத்தினை, இத்துடன் இணைத்து உள்ளேன்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான, இன்றைக்கும் இலட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்ற, உலகின் தொன்மையான நகரங்களுள் ஒன்றான மதுரை, பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மகால் ஆகியவை உலக்ப புகழ்பெற்றவை. அது மட்டும் அல்ல, பல நூற்றாண்டுப் பழமையான கோவில்கள், மதுரையைச் சுற்றிலும் உள்ள தென் மாவட்டங்களிலேயே அதிக அளவில் அமைந்து உள்ளன.
மாதந்தோறும் பத்து டன் அளவில் ஆயத்த ஆடைகள், துணிகள் வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும், ஐந்து டன் எடையுள்ள காய்கறிகள், பழங்கள் வளைகுடா நாடுகளுக்கும், புகழ் பெற்ற மதுரை மல்லிகைப் பூ மத்தியக் கிழக்கு, ஐரோப்பா, கனடா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், வாகன உதிரி பாகங்களும், உணவுப் பொருள்களும் மதுரையைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து ஏற்றுமதி ஆகின்றன. இவை அனைத்தும், தொலைவில் உள்ள விமான நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதி ஆகின்றன.
மேற்கண்ட பொருள்கள் அனைத்தும் மதுரை விமான நிலையத்தில் வழியாகவே ஏற்றுமதி செய்யப்படுமானால், போக்குவரத்துச் செலவு குறைவும்; கால விரயம் தவிர்க்கப்படும்; ஒட்டுமொத்தமாக உற்பத்திச் செலவு குறையும்.
2013 ஆம் ஆண்டு, மே 28 ஆம் நாள் வெளியான அரசு அறிவிக்கையின்படி, மதுரை விமான நிலையம், சுங்கவரி விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டது. ஆயினும், அதற்கான அடிப்படை வசதிகள் எதுவும், இன்றுவரையிலும் செய்து தரப்படவில்லை. எனவே, ஏற்றுமதிச் சரக்குகளைக் கையாள முடியாத நிலையில் உள்ளது.
மதுரை விமான நிலையம், முழுமையான அளவில் சுங்கவரி விமான நிலையமாக இயங்கிடத்தக்க வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் சார்பில் அயல்நாடுகளுடன் செய்து கொள்ளப்படுகின்ற இருதரப்பு ஒப்பந்தங்களின் பட்டியலில் மதுரை விமான நிலையம் இடம் பெற்றிடவும், இதுகுறித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் தாங்கள் ஆவன செய்து தருமாறு அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.