

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 64 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் மற்றும் பட்டங்களை ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான வித்யாசாகர் ராவ் நேற்று வழங்கினார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான வித்யாசாகர் ராவ் கலந்துகொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார். மொத்தம் 64 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் 1,507 பி.எச்டி. மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராக இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அண்ணா பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பொறியாளர்களை உரு வாக்கி உள்ளது. இஸ்ரோவில் பணியாற்றும் பலர் இங்கு படித் தவர்கள். தற்போது பல துறைகளில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். பயிற்சி பெற்ற மக்கள் சக்தியே ஒரு நாட்டின் மிகப்பெரிய சொத்து.
தற்போது அறிவியல், தொழில் நுட்பத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நாம் முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஆராய்ச்சியும் மேம்பாடும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக வும் முக்கியம். பொருளாதார அடிப் படையில் இந்தியா 143 நாடுகளின் பட்டியலில் 76-வது இடத்தில் உள் ளது. அனைவரும் பணம் சம்பாதிக்க முயற்சி செய்து வருகிறார்கள். அதேவேளையில் சமுதாயத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் முக் கியம். பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் நல்ல மனிதர்களாக திகழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரும் பல்கலைக்கழக இணைவேந்தருமான கே.பி.அன்பழகன் பேசும்போது, “உயர் கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கல்வி வளர்ச்சியில் தமிழகத்தை இனி வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் நிலையை அடைந்துள்ளோம். அதே போல தமிழகத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 44.3 சதவீதமாக உள்ளது. அது இந்திய அளவில் 24.5 சதவீதமாக மட்டுமே உள்ளது” என்றார்.
பல்வேறு துறைகளில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே ஆளுநர் பட்டங்களை வழங்கினார். தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் படித்த ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 417 இளநிலை பொறியியல் மாணவர்கள், 34 ஆயி ரத்து 254 முதுநிலை பொறியியல் மாணவர்கள் உட்பட சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரி களில் இனிவரும் காலங்களில் பட் டங்கள் வழங்கப்பட உள்ளன. பல் கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமனம் செய்யப்படவில்லை என்பதால், மாணவர்களின் பட்டங் களில் தமிழக உயர்கல்வித் துறை செயலாளரும் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு தலை வருமான சுனில் பாலிவால் கையெழுத்திட்டுள்ளார்.
மாணவர்கள் போராட்டம்
அண்ணா பல்கலைக்கழகத் துக்கு துணைவேந்தர் நியமிக்காமல் பட்டமளிப்பு விழா நடத்தக் கூடாது என்று மாணவர் அமைப்புகள் மற் றும் பேராசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. மேலும் துணை வேந்தர் கையெழுத்து இல்லாமல் சான்றிதழ்கள் செல்லாது என்ற கருத்தும் நிலவி வந்தது. இந்நிலை யில் பட்டமளிப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியைச் சேர்ந்தவர்கள் அதன் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமையில் பல்கலைக்கழகத்துக்கு அருகில் திடீரென போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 30 பேரை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.