

ஐஐடி நுழைவுத் தேர்வு உட்பட தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என கல்வி யாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விடியல் அறக்கட்டளை மற்றும் தி டான் (கல்சுரல் அண்ட் சோஷியல் அசோசியேஷன்) சார்பில் ‘ஐஐடி படிப்பு தமிழ் மாணவர்களுக்கு நிஜமாகாத கனவா?’ என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது:
நடப்பாண்டு ஐஐடி-க்கு அதிகபட்ச மாணவர்கள் தேர்வான முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. மேலும், தேர்வான மாணவர்களில் 55 சதவீதம் பேர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள். 45 சதவீதம் பேர் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள். இது தவிர, கிராமப்புறங்களில் இருந்து தேர்வான மாணவர்கள் குறைவு. ஐஐடி நுழைவுத் தேர்வு, தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (என்இஇடி) போன்றவற்றை மாநில மொழியிலும் எழுத அனுமதித்தால் தமிழக மாணவர்களும் அதிக அளவில் தேர்வாவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குநர் பரமசிவன் பேசும்போது, ‘‘நமது மாநில பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மாற்றியமைத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்காலத்துக்கு ஏற்றவாறு நமது பாடத்திட்டம் இல்லை. மேலும், மாணவர்கள் சிந்தித்து செயல்படும் அளவுக்கு கேள்வித்தாள்களை அமைப்பதும் அவசியமாகும். இதுதவிர, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வருவதும் அவசியம்’’ என்றார்.
பாரத் பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.பொன்னவைக்கோ பேசும்போது, ‘‘தமிழக பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் இல்லை. ஆரம்பக் கல்வியில் இருந்தே சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் இருப்பதும் முக்கிய குறையாகும்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜெகதீசன், பச்சை யப்பன் கல்லூரி முதல்வர் எஸ்.காளிராஜ், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.ராம கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.