

வருவாய் பற்றாக்குறையைப் போக்க, புதிய பிராண்டுகளின் மூலம் மது விலையை உயர்த்த டாஸ்மாக் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சுமார் 6,800 மதுக்கடைகள் பார்களுடன் செயல்படுகின்றன. சென்னையில் மட்டும் பல்வேறு முக்கிய சந்திப்பு கள், சந்தைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் 500க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மற்றும் பார்கள் செயல்படுகின்றன. இதேபோல், நட்சத்திர ஹோட்டல்களிலும், மெகா வணிக வளாகங்களிலும் பார் களும், எலைட் மதுக் கடைகளும் செயல்படுகின்றன.
இவற்றின் மூலம் டாஸ்மாக் எனப் படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் சார்பில், உள்நாட்டில் தயாராகும் வெளிநாட்டு மது வகைகள் மற்றும் பீர்கள் விற்கப் படுகின்றன. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 22,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
விற்பனை குறைவு
கடந்த ஆகஸ்ட் மாதம், மது வகைகளின் விலை ஏற்றப்பட்ட பின், மது விற்பனை வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு உயர வில்லை. சமீபத்தில் தீபாவளிப் பண்டிகையிலும், கடந்த ஆண்டை விட சுமார் 15 சதவீதம் அளவுக்கு மது விற்பனை குறைந்தது. இதனால் டாஸ்மாக் உயரதிகாரிகள், ஆய்வுக் கூட்டம் நடத்தி, விற்பனை மற்றும் வருவாய் குறைவுக்கான காரணங்களை கண்டறிந்துள்ளனர்.
இதில் முறைகேடான மதுக் கடை பார்கள் மற்றும் விற்பனை அளவு குறைவால்தான், டாஸ்மாக் வருவாய் உயரவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
மதுக்கடைகளை ஒட்டியுள்ள பார்களில் பெரும்பாலானவை, முறையாக பணம் செலுத்தாமல் இயங்குவதாகவும், சில பார்களில், கலப்பட மதுவும், தண்ணீர் கலந்து விற்றும் முறைகேட்டில் ஈடுபடுவதாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து கலால் பிரிவு போலீஸார் மூலம் விசாரணை நடக்கிறது.
பார்களில், கலப்பட மது விற்பனையால், டாஸ்மாக்கின் ஒரிஜினல் மது விற்பனை அளவு குறைவதை, அதிகாரிகள் கண்டறிந் துள்ளனர். எனவே, மது வகைகளின் விலையை உயர்த்தி வருவாய் இழப்பை ஈடுகட்ட டாஸ்மாக் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பார்களின் முறைகேடுகள் குறித்து, தமிழ்நாடு டாஸ்மாக் பணி யாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.இ.பாலுசாமி கூறிய தாவது: சென்னை மண்டலத்தில் மட்டும், பணம் கட்டாமல் 150 பார்கள் சட்ட விரோதமாக செயல்படுவதாக உயரதிகாரிகளிடம் புகார்கள் அளித்துள்ளோம். முறைகேடுகளை களைய அதிகாரிகள், அவ்வப் போது திடீர் ஆய்வு நடத்தி, சம்பந் தப்பட்ட பார் உரிமங்களை ரத்து செய்வதுடன், அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கையும் எடுக் கலாம்.
அரசுக்கு பல கோடி இழப்பு
ஆனால், பெரும்பாலான பார்களில் உரிமம் ரத்தானாலும், அனுமதியின்றி பாரை தொடர்ந்து நடத்துவதால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதேபோல், மதுக்கடைகளை மூட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மது விலையை உயர்த்துவதால், சாதாரண தொழிலாளர்களின், கொஞ்சமான சேமிப்பு பணமும் இனி மதுவுக்கே செலவழிக்கும் நிலை ஏற்படும். இதற்கு வழிகாண, மது விற்பனை மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தில் சீரமைப்பு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், மது விற்பனை அளவு குறைந்த நிலையில், கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு, மதுபான உற்பத்தி நிறுவனங்களும் டாஸ்மாக்குக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. அதனால் புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் புதிய விலையை நிர்ணயம் செய்து கொள்ளுமாறும், மற்ற மது வகைகளுக்கு சிறிதளவு மட்டும் ஏற்றித் தரவும், டாஸ்மாக் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள் ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும், டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.