

திருவள்ளூர் அருகே உள்ளது பட்டரை பெரும்புதூர் கிராமம். பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் இருந்தே பெருமூர், சிம்மலாந்தக சதுர்வேதி மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் பட்டரை பெரும்புதூர் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
பட்டரைபெரும்புதூரில் நத்த மேடு, ஆனைமேடு மற்றும் இருளந்தோப்பு ஆகிய பகுதிகளில் தமிழக தொல்லியல் துறையினர் கடந்த ஏப்ரல் 22 முதல் ஜூலை 1 வரை அகழாய்வு மேற்கொண்டனர்.
தமிழக தொல்லியல் துறை ஆணையர் தா.கார்த்திகேயனின் அறிவுறுத்தலின்படி, சென்னை மண்டல துணை இயக்குநர் ஆர்.சிவானந்தம் மேற்பார்வையில், அகழாய்வு பொறுப்பாளர்கள் ஜெ.பாஸ்கர், பி.பாஸ்கர், கே.ரஞ் சித் ஆகியோர் அடங்கிய குழுவி னர் இந்த அகழாய்வினை மேற் கொண்டனர். இந்த ஆய்வில், 500-க்கும் மேற்பட்ட தொல்பொருட் கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மண்டல துணை இயக்குநர் ஆர்.சிவானந்தம் கூறிய தாவது: பட்டரைபெரும்புதூரில் மேற் கொள்ளப்பட்ட முதல்கட்ட அகழாய்வில், 500-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.கற்கால மனிதர்கள் பயன்படுத் திய கற்கருவிகள், இரும்புக் காலத்தைச் சார்ந்த கருப்பு சிவப்பு மட்கலன்கள், மெருகூட்டப்பட்ட கருப்பு மட்கலன்கள், காவி வண்ணம் பூசப்பட்ட மட்கலன்கள், வழவழப்பான சிவப்பு மட்கலன்கள் கிடைத்துள்ளன.
மேலும், இரும்புப் பொருட்கள், கல்மணிகள், செம்புப் பொருட்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், யானை தந்தத்தினால் ஆன கழுத்து ஆபரணம், சுடுமண்ணால் ஆன மணிகள், பல்வேறு குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் உள்ளிட் டவையும் இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன.
வரலாற்றுத் தொடக்க காலத்தை பதிவுசெய்யும் தமிழ் பிராமி எழுத்துக் கொண்ட பானை ஓடுகள், ரோமானியர்கள் வருகை யைப் பறைசாற்றும் ரவுலட்டட் மட்பாண்டங்கள், ரோமானியர்கள் வாசனை புகைக்காக பயன்படுத்தும் சந்தனம் உள்ளிட்ட வாசனை கட்டைகளை எரிக்கும் கூம்பு வடிவ ஜாடிகள், துளையிடப்பட்ட கூரை ஓடுகள் ஆகிய முக்கிய தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.
அதுமட்டுமல்லாமல், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிக அதிக எண்ணிக்கையிலான உறை களை கொண்ட உறை கிணறு ஒன்றும் இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் யாவும், 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை குறிக்கும் பழங்கற்காலத்தின் கடைக் காலம் மற்றும் இடைக் கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்க காலம் ஆகிய காலங்களைச் சேர்ந்தவை யாகும்.
இந்த அகழாய்வில் கிடைத்த சான்றுகள் யாவும், பட்டரைபெரும் புத்தூரில் 30 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாக மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை சொல்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழக தொல்லியல் துறை யினர், பட்டரைபெரும்புதூரில் மேற் கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களில் 200 பொருட்களை நேற்று, பட்டரை பெரும்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் காட்சி படுத்தியிருந்தனர். அதனை பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வமாக பங்கேற்று, பார்வையிட்டனர்.