ஓசூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிப்பு

ஓசூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிப்பு
Updated on
1 min read

ஓசூர் நகர சாலைகளில் போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காமல் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் சாலைகளில் தினமும் வாகன நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். போக்கு வரத்து நெரிசலைப் போக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் ஓசூர் பாரதிதாசன் நகரில் வசிக்கும் எம். மாதேஷ் என்பவர், ‘தி இந்து’-வின் ‘உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஓசூர் நகரின் மையப்பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சாலை மற்றும் நேதாஜி சாலை ஆகிய இரு சாலைகளும் ஒரு வழிப்பாதையாக உள்ளன. ஆனால், முறையாக சாலை விதிகளைக் கடைபிடிக்காத வாகன ஓட்டிகளால் இவை இருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த இரு சாலைகளிலும் இரு திசைகளிலும் வாகனங்களைச் செலுத்துகின்றனர். மேலும் சாலையின் இரு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்துகின்றனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் திண்டாடும் நிலை உருவாகிறது. மேலும் நகர சாலைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே கனரக சரக்கு வாகனங்கள் நுழைய வேண்டும் என்ற நிலை மாறி, பகலில் எல்லா நேரத்திலும் கனரக சரக்கு வாகனங்கள் நகர சாலைகளில் நுழைந்து விடுகின்றன. இதனாலும் குறுகிய நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஓசூர் நகர சாலைகளில் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் தொடர்வதால் இச்சாலைகளை கடந்து மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பள்ளி மாணவர்கள், பணிக்குச் செல்பவர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

இச்சாலைகளில் போக்கு வரத்து விதிகளை முறையாக கடைபிடித்தால் சுமார் 80 சதவீத விபத்துக்களைத் தவிர்க்க முடியும். ஆகவே ஓசூர் நகர சாலைகளில் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in