Published : 04 Feb 2017 12:29 PM
Last Updated : 04 Feb 2017 12:29 PM

மாமல்லபுரம் கடற்கரையில் ஒதுங்கும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள்: கடலில் பரவிய எண்ணெய் படலம் காரணமா?-சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரைக்கு வந்து பார்த்துச் செல்கின்றனர்.

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே 2 கப்பல்கள் மோதிக் கொண்டதில், அதில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. கப்பலில் இருந்து தொடர்ந்து எண்ணெய் கசிவதால் அப்பகுதி முழுவதும் கருப்பாக மாறியது. எண்ணூர் பகுதியில் தொடங்கி படிப்படியாக பரவிய எண்ணெய் படலம் 2-வது நாளில் மெரினா கடற்கரையைத் தொட்டது. பின்னர் தொடர்ந்து பரவி வருகிறது.

இதன் காரணமாக, நீரின் மேற்பரப்பில் அடர்த்தியான எண்ணெய் படலம் சூழ்ந்ததால் சூரிய வெளிச்சம் கடலுக்குள் செல்லாமல் ஆமை, மீன்கள் உட்பட கடல் வாழ் உயிரினங்கள் இறப்பது அதிகரித்து வருகிறது. எண்ணூர் பகுதியில் எண்ணெய் படிந்த நிலையில் ஏராளமான ஆமைகள் இறந்த நிலையில் கரைஒதுங்கிக் கிடக்கின்றன. மீன்களும் செத்து மிதப்பதால் பொதுமக்கள் மீன் உணவை தவிர்த்தனர். இதனால் காசிமேடு உள்ளிட்ட மீன்விற்பனை மையங்கள் வெறிச்சோடின. அச்சம் காரணமாக மக்கள் மீன் வாங்காததால் மீன் விற்பனை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

வியாபாரிகளும் மீன் சந்தைகளுக்கு கடந்த ஒரு வாரமாக மீன் வாங்க செல்லவில்லை. இதனால் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்களை ஐஸ்பெட்டியில் 3 அல்லது 4 நாட்களுக்கு மேல் வைக்க முடியாது. அதன் பிறகு, கருவாடாக பயன்படுத்த அவை பாடம் செய்யப்படும்.

மக்களின் அச்சம் காரணமாக ஆந்திரா, கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுதவிர, மேற்கு வங்கம், ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் மீன்கள் சென்னைக்கு வரவழைக் கப்பட்டுள்ளன.

மேலும் மீன் அறுவடை கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணெய் படலம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு கடுமையான மீன் பற்றாக்குறை ஏற்படும் என மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த எண்ணெய் படலம் கரை வரை படிந்துள்ளதால், மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, கச்சா எண்ணெயை அகற்ற உடனடி நடவடிக்கை எடுத்துக் கடல்வளத்தையும் சுற்றுச்சூழலையும் காப்பற்ற வேண்டும் என்பதும் மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

பரவும் எண்ணெய் படலம்

இதனிடையே எண்ணெய் அகற்றும் பணி மெதுவாக நடந்து வருவதாக புகார் எழுந்தது. நவீன தொழில் நுட்பங்கள் ஏதும் பயன்படுத்தாததால் எண்ணெய் படலம் தொடர்ந்து பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில், சர்வதேச சுற்றுலாத் தளமான மாமல்லபுரம் பகுதியிலும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களும் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. இதில் ஆமை, கடல் பாம்பு உள்ளிட்டவைகளும் அடக்கம். இதை அப்பகுதி மக்கள் பார்த்து வருகின்றனர்.

இந்த உயிரினங்கள் உயிரிழப்புக்கு கடலில் எண்ணெய் படலம் பரவியதே காரணமாக இருக்கும் என கருதப்படுகிறது. எண்ணெய் கொட்டியதால் பாதிக்கப்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறிய இந்த உயிரினங்கள்தான் தற்போது இறந்த நிலையில், மாமல்லபுரம் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியிருக்கலாம் என அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலரிடம் கேட்டபோது, எண்ணூர் கடலில் கச்சா எண்ணெய் கலந்ததன் காரணமாக நீலாங்கரை வரை பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன. இதேபோலத்தான் மாமல்லபுரத்திலும் இறந்த நிலையில் கடல் உயிரினங்கள் கரை ஒதுங்கியிருக்கலாம் என்று தெரிவித்தனர். இறந்த உயிரினங்களை கடற்கரையில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x