

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நான் வெற்றி பெற்றால் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வர் ஆவார் என்று மதுசூதனன் தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) கட்சி சார்பில் போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரச்சாரம் செய்தார். கொருக்குப் பேட்டை பகுதியில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். ஏகப்பன் தெரு - முனியப்பன் தெரு சந்திப்பில் திரண்டிருந்த வாக்காளர்கள் மத்தியில் மதுசூதனன் பேசியதாவது:
நான் அமைச்சராக இருந்த போது கொருக்குப்பேட்டை பகுதியில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தேன். திட்டங்களை சொல்லி உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். ஆனால், டிடிவி தினகரனோ பணப்பெட்டியை வைத்துக்கொண்டு வாக்கு கேட்டு வருகிறார். பணத்தால் வாக்கு களை விலை பேச முடியாது.
மறைந்த முதல்வர் ஜெய லலிதா, ஓ.பன்னீர்செல்வத்தை 3 முறை முதல்வர் ஆக்கினார். அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட 2 முறையும் என்னை தான் மாற்று வேட்பாளராக தேர்வு செய்தார். சசிகலாவையோ, தினகரனையோ, திவாகரனையோ தேர்வு செய்யவில்லை. இந்த தேர்தலை வெறும் இடைத்தேர்த லாக கருத வேண்டாம். சசிகலா, தினகரன் அணியை விரட்டி அடிக்கும் தேர்தலாக கருதி வாக்களியுங்கள். தேர்தலில் நான் வெற்றி பெற்றால் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தமிழக முதல்வர் ஆவார். இடைத்தேர்தல் முடிந்ததும் சசிகலா அணியினர் காணாமல் போய்விடுவார்கள். இவ்வாறு மதுசூதனன் கூறினார்.
சுயேச்சை வேட்பாளர் ஆதரவு
ஏகப்பன் தெருவில் நடந்த பிரச்சாரத்தின்போது சுயேச்சை வேட்பாளர் மஞ்சுளா ரவிக்குமார், மதுசூதனனுக்கு பொன்னாடை போர்த்தி ஆதரவு தெரிவித்தார். போட்டியில் இருந்து விலகுவ தாகவும் அறிவித்தார். ஏற்கெனவே, சுயேச்சை வேட்பாளர் ரேணுகா வும் மதுசூதனனுக்கு ஆதரவு தெரி வித்துள்ளது குறிப்பிடத்தக்கது.